கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 16                     திருப்புவேன் கட்டுவேன்           ஆமோஸ் 9:1-15

என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்;

அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து,

திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து,

தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். (ஆமோஸ் 9:14)

        அருமையானவர்களே இஸ்ரவேல் மக்கள் சிறைபட்டு போனதும், அவர்களுடைய வாழ்க்கை நிர்பந்தமாய் போனது என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஒருவேளை இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய வாழ்க்கை ஏதோ ஒரு சிறையிருப்பைப் போல காணப்படலாம். ஆனால் தேவன் சொல்லுகிறார் சிறையிருப்பை நான் திருப்பிவிடுவேன். கர்த்தரை நம்பு, உன் சிறையிருப்பு எதுவாக இருக்கலாம், உன் ஆத்தும சிறையிருப்பாக இருக்கலாம் அல்லது எந்தவித சிறையிருப்பாக இருக்கலாம். கர்த்தர் சொல்லுகிறார் நான் அதை திருப்புவேன் என்று.
      இன்னுமாக அவர் கட்டுவேன் என்றும் சொல்லுகிறார். ஏசாயா 61:4 -lல் ” அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்” (ஏசாயா 61:4) என்று சொல்லுகிறார். இடிபட்ட வாழ்க்கையைப் போல உன்னுடைய வாழ்க்கை காணப்படுமானால், வேதம் சொல்லுகிறது உன்னுடைய வாழ்க்கையானது மறுபடியுமாகக் கட்டப்படும்.
     அதுமாத்திரமல்ல ஒருவேளை நீண்டகாலம் இடிந்துபோன உன்னுடைய சிறையிருப்பும் கூட புதிதாகக் கட்டப்படும் என்று வேதம் சொல்லுகிறது. இன்னுமாக எரேமியா 30:18 -ல் ” கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்” என்று சொல்லுகிறார். ஒருவேளை உன் ஆத்துமா ஒருகாலத்தில் கொண்டிருந்த ஆவிக்குரிய நிலை மங்கிப்போய் இப்பொழுது இருக்குமானால் தேவன் சொல்லுகிறார் முன்போல நிலைப்படும் என்று. விசுவாசி. கர்த்தர் அவ்விதமாகவே செய்வார்.