செப்டம்பர்   9      

‘தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.’ (சங்கீதம்51:17)

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பலிகள் ஆண்டவராகிய இயேசுவில் நிறைவேறிவிட்டது. ஆகவே அந்த பலிகளை இன்று நாம் செலுத்துவதில்லை. அந்த பலிகள் இயேசு ஆண்டவரின் பலியை நிழலாட்டமாய்க் காண்பிக்கிறவைகள். ஆனாலும் ஆவிக்குரிய பலிகள் இன்றும் நமக்குப் பொருந்தும். ஸ்தோத்திரபலியைப் போல நொறுங்குண்ட இருதயமும் தேவனுக்கேற்கும் பலியே. உங்கள் இருதயத்திலிருந்து அவ்விதமான பலிகளை நீங்கள் செலுத்துகிறீர்களா? அவை நமது ஆத்துமாவிற்கு மிகவும் அவசியமானவைகள். தேவன் நம்முடைய அநேக பாவங்களை மன்னித்திருப்பதை நினைவுகூறும்பொழுதும், தேவன் நம்முடைய பாவங்களுக்குதக்கதாக நம்மைத் தண்டிக்கவில்லை என்பதை நினைக்கும்பொழுதும் நிச்சயமாக நம்முடைய இருதயம் உடைபடவேண்டும். உடைப்பட்ட இருதயத்திலிருந்து தேவனை நன்றியோடு துதிப்பது ஸ்தோத்தரிப்பது தேவனுக்குச் செலுத்தும் பலி. இவ்விதமான பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.’ தாவீது பாவத்தில் விழுந்த பின்பு நாத்தான் தீர்க்கத்தரிசியினால் உணர்த்தப்பட்டபொழுது தாவீதின் இருதயம் உடைபட்டது. தேவனுக்கு முன்பாக தான் பண்ணின துரோகத்தையும், தன்னுடைய பாவத்தினிமித்தம் தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட்டதென்பதையும் நினைவு கூர்ந்தான். இவ்வளவு பெரிய பாவியாய் நான் இருக்கிறேனே என்ற உணர்வோடு அவன் தன்னை முற்றிலும் தேவனுக்கு முன்பாக தாழ்த்தினான். தேவன் அவ்விதமான நொறுங்குண்ட இருதயத்தை, அதிலிருந்து வந்த விண்ணப்பத்தை அங்கீகரித்தார்.

பேதுருவும்கூட தேவனை எவ்வளவு சீக்கிரம் மறுதலித்தான் என்பதை, தான் உணர்ந்தபோது மனங்கசந்து அழுதான். பேதுருவை தேவன் மன்னித்தார். நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயமும் அவ்விதமான இருதயத்திலிருந்து வரும் ஜெபமும் ஒருக்காலும் தேவனால் புறக்கணிக்கப்படமாட்டாது.