நவம்பர் 12
“நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” (யாக்கோபு 4:3).
நாம் ஏறெடுக்கிற அநேக ஜெபங்களுக்கு கர்த்தர் ஏன் நமக்கு பதிலளிப்பதில்லை? இயேசுகிறிஸ்து: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” (மத் 7:7) என்று வேதத்தில் கூறியிருக்கிறாரே. பின்பு ஏன் நமக்கு பிரதியுத்தரம் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்? அப்படியானால் தேவன் பொய் சொல்லுகிறவரா? அல்லது நாம் கேட்டதை நிறைவேற்ற பெலனற்றவரா? இல்லை. அந்த தேவன் என்றும் மாறாதவர். காரணம் என்னவென்றால், வேதம் சொல்லுகிறது நம்முடைய விண்ணப்பங்கள் சுயநலத்துடன் காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவைகள் பாவத்துக்கு ஏதுவாகவும் இருக்கிறது. நம் விண்ணபங்களை ஆராய்ந்து பார்த்தோமானால் அதில் ஆவிக்குரிய காரியங்கள் சொற்பமே. சிலர் அருமையான விண்ணப்பங்களை ஏறெடுப்பார்கள் ஆனால் அவர்களின் உள்ளான வாஞ்சையோ உலகத்தின் பேரில் காணப்படும். அப்படியானால் அவர்களின் விண்ணப்பம் என்பது வெறும் உதட்டளவு மாத்திரமே.
நம்முடைய ஜெபங்கள் எவ்விதம் இருக்கிறது? நம் ஜெபங்களுக்கு பலன் கிடைக்காததற்கு காணரம் என்னவென்று பார்த்தால் 1. சுயலநலம் 2. இச்சைகள் 3. தேவனுடைய நாமம் வீணில் வழங்கப்படுகின்றது. அன்பானவர்களே! நம் வாழ்க்கையில் ஜெபம் என்பது அதிமுக்கியமான ஒன்றாகும். ஒரு கிறிஸ்தவனுக்கு உயிர் மூச்சு என்பது அவனுடைய ஜெபமே. நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் உயிருடன் இருப்பதற்கு ஒரு ஆதாரம் ஜெபம். உன்னிடத்தில் ஜெபம் இல்லையென்றால் உன்னிடத்தில் ஆவிக்குரிய சுவாசமில்லை. ஆம்! அது மரணம். உடைந்து போன நம் ஜெப வாழ்க்கையை செப்பனிடுவோம். நாம் தேவனுடைய சித்தத்தின்படி எதைக்கேட்டாலும் அதை நமக்குத் தருவார் என்று வேதம் சொல்லுகிறது. விசுவாசத்துடன் கர்த்தரைச் சார்ந்துகொள்.