கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 2        கனி கொடுக்கிற கொடி      யோவான் 15:1-10

“என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ

அதை அவர் அறுத்துப்போடுவார், கனிகொடுக்கிற

கொடி எதுவோ அது அதிக கனிகளைக்

கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்”(யோவான் 15:2)

 

    தேவன் தன்னுடைய பிள்ளைகளை சுத்தம் பண்ணுகிறார். அதாவது அவர்களுக்கு துன்பம் அனுப்புகிறார். துன்பங்கள் தேவனை அறியாதவர்களுக்கு மாத்திரம் என்று எண்ணுவது எவ்வளவு தவறு. தேவன் அவைகளை தம்முடைய  சர்வ ஞானத்தினால் அந்த வேளைகளில் அவருடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். தேவன் அவைகளை மேலான நோக்கத்திற்க்கென்று அவர்களுக்கு நற்தூதர்களாக அனுப்புகிறார். அவைகள் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களை கிறிஸ்துவின் சாயலை உருவாக்குகிறது. தெய்வீகத் தன்மைகளை உருவாக்குகிறது. பாடுகள், இக்காலத்தில் கடந்து போவது கடினமாகக் காணப்பட்டாலும், அதில் பழகினவர்களுக்கு பிற்காலத்தில் நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

     ஆனால் தேவன் இவைகளை மிகவும் நேர்த்தியாக நம்மில் செய்கிறார் என்பதை மறந்து, துன்பங்களையே பார்த்து சோர்ந்து போவதில்  தான் நம்முடைய பிரச்சனை இருக்கிறது. அன்பானவர்களே! தேவனுக்கென்று கனி கொடுக்கும் வாழ்க்கையைப் போல ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை உண்டா? தேவனுக்கென்று கனிகொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உன்னில் இல்லையா? நாம் தேவனுடைய பிள்ளையாய் இருப்பதின் பலன் இவ்விதமாய் வெளிப்பட தேவன் திட்டமிட்டிருக்கிறார் என்ற உண்மை நம்மை எல்லா சூழ்நிலைகளிலும் ஆற்றித் தேற்றட்டும்.

    அதற்கு முந்தின பகுதியான ‘என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அறுத்துப்போடுகிறார்.’ என்பது எவ்வளவு பயங்கரமான வார்த்தை. இது நமக்கு வேண்டாம். கனிகொடுக்கிற ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையையே வாஞ்சிப்போமாக. நீ தேவனிடத்தில் அவ்விதமான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்காக ஜெபி. தேவன் நிச்சயமாக உனக்குக் கொடுப்பார். கனியற்ற கொடியாக நீ இருக்கவேண்டிய அவசியமில்லை.