கிருபை சத்திய தின தியானம்

மே 6                 எலும்புகள் உயிரடையுமா ?           எசே 37 : 1 -10

‘மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா?’    (எசேக்கியேல் 37 : 3)

    தேவன், எசேக்கியேல் தீர்க்கதரிசியை ஆவிக்குள்ளாக்கி, எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்குகள் நடுவில் நிறுத்தி, இந்தக் கேள்வியைக் கேட்கிறார். இந்த எலும்புகள் உயிரடையுமா? எசேக்கியேல், பாபிலோன் தேசத்தில் சிறைப்பட்டுப்போன மக்களுக்கு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி. எருசலேம் ஆலயம், அலங்கம், இடிக்கப்பட்ட நிலையில், இஸ்ரவேல் மக்கள் அந்நிய தேசத்தில் அடிமைகளைப்போல வாழ்ந்த காலத்தில், மறுபடியும் எருசலேம் கட்டப்படுவதற்கான சாத்திய கூறு இல்லாத நிலையில், இவ்விதம் கேட்கப்படுகிறது. மறுபடியும் எருசலேம் கட்டப்படுமா? மறுபடியும் ஆவிக்குரிய எழுச்சி ஏற்படுமா? என்ற பலவிதமான கேள்விகள் மத்தியில் தேவன் இவ்விதம் கேட்கிறார். இந்த எலும்புகளைக் குறித்து ‘மகா திரளாய்க் கிடந்தது, அவைகள் மிக உலர்ந்ததுமாய் இருந்தது’ என்று சொல்லப்படுகிறது. முற்றிலும்  நம்பிக்கையற்றநிலை. இவ்விதம் உலர்ந்துபோன எலும்புகள் எப்படி உயிர் பெற்று எழும்பக்கூடும்? இதுவரை அவ்விதம் பார்த்ததே இல்லை. இது எப்படி நடக்கும்? அன்பானவர்களே ! இதுவே மனிதனுடைய பதில். அது ஒருக்காலும் முடியாது. நிச்சயமாய் முடியாது என்பதே.

    ஆனால் தேவனுடைய வல்லமையை அறிந்த தீர்க்கத்தரிசி ஞானமான பதில் சொல்லுகிறார். அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே தேவரீர் அதை அறிவீர் என்றேன் (எசே 37 : 3 ) இவர் தேவாதி தேவன், சர்வவல்லவர், அவர் அறிவார். உன்னுடைய வாழ்க்கையில் தேவனை இவ்விதம் அறிந்திருக்கிறாயா? அவ்விதம் விசுவாசிக்கிறாயா? இன்று மனிதர்கள் தேவனுடைய வல்லமையையும், மகத்துவத்தையும், மட்டுப்படுத்துகிறார்கள்.

    ஏன்? விசுவாசமில்லாமல்,  வேதம் போதிக்கிறவிதமாய் தேவனை அறியாததினால் தான்.

    இந்த உலர்ந்துப்போன எலும்புகள் எப்படி உயிர்கொண்டன? தேவன் கட்டளையிட்டபடியே தீர்க்கதரிசனம் உரைக்கையில், அதாவது கர்த்தருடைய வார்த்தையை உரைக்கையில், ஒரு இரைச்சல் உண்டாயிற்று, இதோ அசைவுண்டாகி ஒவ்வொரு எலும்பும் தன் தன் எலும்போடே சேர்ந்துக்கொண்டது. உன்னுடைய காரியங்கள் உலர்ந்த எலும்புகளா? தேவனை நம்பு. அவர் ஒருவரே உயிரடையச் செய்ய வல்லவர்.