ஆகஸ்ட்  4               

“உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள், அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப் பண்ணினேன்.” (ஏசாயா 51:2)

ஆபிரகாமையும் சாராளையும் நோக்கிப்பார்க்க தேவன் இஸ்ரவேல் மக்களை அழைத்தார். ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கையை, நோக்கிப்பார்க்க இந்த மக்களை அழைக்கிறார். தேவனுக்கென்று வாழ்ந்த மக்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவர்களுடைய பின் சந்ததிக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. உன்னுடைய வாழ்க்கை அவ்விதம் உன் சந்ததிக்கு ஆசீர்வாதமுள்ள சவாலாக இருக்கிறதா? நீ இன்றைக்கு தேவனுக்கென்று வாழும் வாழ்க்கை ஒருபோதும் வீணல்ல. அது சந்ததி சந்ததியாக அநேகருக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கும். நீ இந்த உலகத்திற்காக, சுயத்திற்காக வாழுவாயானால் நீயும் ஆசீர்வாதத்தை பெறுவதில்லை, மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாயிருப்பதில்லை.

மேலும், தேவன் ஆபிரகாமோடே இடைப்பட்ட விதத்தையும் சொல்லுகிறார்.” அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து” என்று சொல்லுகிறார். தேவன் தனி மனிதனோடு செயல்படுகிறார் என்பதை எப்போதும் மறவாதே. உன்னை தனியாய் அறிந்திருக்கிறார்.  உன்னையும் அவர் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உன்னுடைய ஒவ்வொரு செய்கையையும் தேவன் நோக்கிப்பார்க்கிறார். அது தேவனுக்கு ஏற்றதாக இருந்தாலும் சரி, அது தேவனுக்கு ஏற்காததாய் இருந்தாலும் சரி, தேவன் அதை நோக்கிப்பார்த்து கொண்டேயிருக்கிறார். மேலும் கர்த்தர் உன்னுடைய இருதயத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும் கூட நோக்கிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை மறவாதே. நீ தேவனுக்குப் பிரியமாய் காரியங்களைச்  செய்யவும், தேவனுக்கு பிரியமான இடங்களுக்குப் போகவும், தேவனுக்கு பிரியமான  எண்ணங்களை கொண்டிருக்கவும் வாஞ்சிப்பாயானால் ஆபிரகாமை ஆசீர்வதித்த தேவன் உன்னையும் ஆசீவதிப்பார்.