கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 5                                              ஆனந்த பாக்கியம்                                          தீத்து 2 : 1 – 15

தீத்து 2 : 12. 13. நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

  பவுல் தீத்துவுக்கு எழுதும்பொழுது இரண்டு காரியங்களை நாம் புறக்கணிக்கவேண்டும் அதாவது அவைகளை வெறுத்துத் தள்ள வேண்டும் என்று சொல்லுகிறார். அவைகள் எவை? 1. அவபக்தி அதாவது பக்தியில்லாத வாழ்க்கை, பக்தியில்லாத சிந்தை, செயல். 2. உலகத்துக்குரிய ஆசைகள், இச்சைகள். இவைகளை நீ புறக்கணிக்காமல் உண்மையான கிறிஸ்தவனாய் வாழ முடியாது. இன்றைக்கு அநேகர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டாலும் இவைகளில் ஊறிப்போனவாழ்க்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

 அதற்கு பதிலாக நாம் எவைகளைக் கொடுக்கவேண்டும் என்று பவுல் சொல்லுகிறார்? 1. தெளிந்த புத்தி, அதாவது மெய்யான ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றிலும் தெளிவான நோக்கத்தோடு வாழ்கிறவனாய் காணப்படுவான். 2. தேவ நீதியைக் கொண்டிருக்க வேண்டும். சுய நீதியை வெறுத்து, கிறிஸ்துவினால் வரும் நீதியைத் தரித்தவனாய் வாழவேண்டும். 3. தேவ பக்தியுள்ளவனாய் வாழவேண்டும். தேவ பக்திக்குரிய காரியங்களுக்கு முதலாவது இடமும் முக்கியதுவமும் கொடுத்து வாழவேண்டும்.

 அடுத்த பகுதியில் நாம் இரண்டு காரியங்களை எதிர்ப்பார்க்க வேண்டும். 1. நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம். ஆம்! பரலோக ராஜ்யம் நம்மால் முழுமையாய் நம்பவேண்டும்.  பரலோக எதிர்ப்பார்ப்பு உன்னில் இல்லையென்றால் நீ ஒரு முழுமையான கிறிஸ்தவனாய் வாழமுடியாது. 2. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. இதை ‘மகிமையின் பிரசன்னமாகுதல்’ என்று வேதம் சொல்லுகிறது. அநேகர் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நம்புவதில்லை, ஆகவே எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நாம் எதிர்ப்பார்போடே ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று வேதம் தெளிவாய் போதிக்கிறது.