செப்டம்பர் 19                 

‘அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.’ (ஏசாயா 65:23)

அவர்கள் உழைப்பு வீணாய்ப் போவதில்லை. இன்றைக்கு அநேகர் தேவனற்றவர்களாய், தேவனுடைய ஒத்தாசையைத் தேடாமல் தங்கள் சுய ஞானத்தைச் சார்ந்து உழைக்கிறார்கள். ஆனால் அப்படிபட்டவர்களின் உழைப்பு பொத்தல் பையில் போடுவதுபோல் இருக்கும். மெய்யாலும் ஆசீர்வாதம் இருக்காது.  தேவனைச் சார்ந்து வாழுபவர்கள் பிள்ளைகளைப் பெற்றது அவர்களுக்கு வேதனையையும் வருத்தத்தையும் கொடுக்காது. பிள்ளைகளின் காரியங்கள்  மனதுக்கு வேதனையாக இருக்காது என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒருவேளை நீங்கள் உங்கள் பிள்ளைகளினால் துன்பம் அனுபவிப்பீர்களானால் இந்த வாக்குத்தத்தத்தை கர்த்தரிடத்தில் எடுத்துச்சென்று மன்றாடுங்கள். தேவனிடத்தில் ஜெபத்தில் கெஞ்சுங்கள். தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்டு, உங்கள் பிள்ளைகளை மாற்றுவார். அப்பொழுது உங்கள் ஜெபத்தைக் கேட்ட கர்த்தரைத் துதிப்பீர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை கர்த்தர் நிறைவேற்றுமளவும் அவரை விடாதீர்கள். ‘சீயோனிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதன் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப் போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்’ (ஏசாயா 62 :1) என்று சொல்லுங்கள். தேவனால் கூடுமென்று விசுவாசித்து மனந்தளராமல் ஜெபியுங்கள். தேவன் பெரிய காரியங்களைச் செய்வார்.

மேலும் ‘அவர்களும், அவர்களோடே கூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்’ (ஏசாயா 65 : 23). உங்களுடைய பிள்ளைகள் மாத்திரமல்ல உங்கள் சந்ததியும் இவ்விதம் கர்த்தராலே ஆசீவதிக்கப்படுவார்கள். உங்களுடைய வாழ்க்கையும் உங்கள் சந்ததிக்கு ஒரு சவாலாகவும் முன்மாதிரியாகவும் இருக்கும். உங்கள் ஜெபமும் ஜெபவாழ்க்கையும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு  அதின் பலனாக சந்ததியையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். ‘உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள், அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும்’ (சங்கீதம் 102 :28)