கிருபை சத்திய தினதியானம் 

மார்ச் 5                ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை           யோவான் 7:37–40

“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் 

உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்” (யோவான் 7:38).

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நாம் முழுமையாக சார்ந்து வாழும்போது, நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்போம். மற்றவர்களுக்கு ஜீவனைக்கொடுக்கக் கூடிய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையைக் கொண்டிருப்போம். ஏனென்றால், “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்”(ஏசாயா 58:11) என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவன் நமக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்து, நம் வாழ்க்கையை செழிப்பாக்குகிறார். அதுமாத்திரமல்ல, நம் வாழ்க்கையை ஒருக்காலும் பிரயோஜனமற்றதாகவோ அல்லது வெறுமையாய் போகவோ அனுமதிக்கமாட்டார். நம் வாழ்க்கையை வற்றாத நீரூற்றைப்போல ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமான கருவிகளாக நம்மை உபயோகப்படுத்துவார்.
     “அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்” (சகரியா 14:8) என்று கர்த்தர் சொல்லுகிறார். அதாவது நம் வாழ்க்கையானது மாரிக்காலத்திலும், கோடைகாலத்திலும் மற்ற எல்லாக் காலத்திலும் மற்றவர்களுக்கு தேவனுடைய சத்தியத்தைக் கொடுத்து அவர்களை கர்த்தருக்குள் வழிநடத்தக்கூடிய ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாய் வாழ கர்த்தர் நமக்கு உதவி செய்வார். ஆகவே நாம் கர்த்தரையே முழுமையாக சார்ந்துகொண்டு, நம் வாழ்க்கை நமக்கும், மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கத்தக்கதாக அவருடைய ஜீவத்தண்ணீரை நாம் பருகுவது மட்டுமல்ல, நம் மூலமாக பிறரும் அந்த ஜீவத்தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும்படியாக நம் வாழ்க்கையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்.