கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 8            ஆசீர்வதிப்பேன்          ஆகாய் 2 : 15 – 23

நான் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன்” ( ஆகாய் 2 : 19)

    பாபிலோன் தேசத்திலிருந்து திரும்பி வந்த யூதமக்கள், இடிந்துபோன தேவாலயத்திற்குப் பதிலாக வேறு தேவாலயத்தை எருசலேமில் கட்ட ஆரம்பித்தார்கள். அஸ்திபாரம் போடப்பட்டது. ஆனால், அதை தொடர்ந்து கட்டுவதை விட்டுவிட்டார்கள். இந்த மக்கள் தேவாலயத்தை கட்டுவதை விட்டு அவரவர்கள் தங்கள் சொந்த வீடுகளை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக்காலத்தில் கர்த்தர் இரண்டு தீர்க்கத்தரிசிகளை எழுப்பினார். அவர்கள் ஆகாய்,சகரியா என்பவர்கள். ஆகாய் தீர்க்கத்தரிசி ‘இந்த வீடு பாழாய் கிடக்கும்பொழுது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவா?’ (ஆகாய்  1 : 4) என்று கேட்டார். இந்த மக்கள் தங்கள் பாவத்தை உணர்ந்தார்கள். மறுபடியும் தேவ ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.

   இவ்விதமான மனமாறுதலைக்கண்ட தேவன், ‘நான் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன்’ என்று சொன்னார். என்றுமே மனந்திரும்புதல் தேவனுடைய ஆசீர்வாதத்தை நமக்கு கொண்டுவருகிறது. மனந்திரும்பாமை தேவனுடைய ஆசீர்வாதத்தை தடைசெய்கிறது. இந்நாள் மட்டும் அந்த மக்களின் நிலங்கள் சரியாக விளையவில்லை. அப்படி விளைந்தாலும் விஷப்பனியும் கல்மழையும் அவைகளை அழித்தன. ஆனால் இப்போதோ, தேவன் ஆசீர்வதிக்கிறேன்  என்று சொல்லியிருக்கிறார்.

    மனந்திரும்புதல் மற்ற ஆசீர்வாதங்களைப் பெறுவதோடல்லாமல், தேவனுக்கு நெருக்கமான உறவையும் கொண்டுவருகிறது. இதன்மூலம் இன்னும் அதிகமான ஆவிக்குரிய நன்மைகளை நமது வாழ்வில் கொண்டுவருகிறது. இந்த மக்கள் தேவனுடைய ஆசீர்வதிக்கும் கரத்தை பார்த்தவண்ணம் நாமும் மனந்திரும்பும்போது அநேக நன்மைகளைக் கண்டடைவோம். அவைகளை உலகத்துக்கடுத்த ஆசீர்வதங்களாக மாத்திரமல்லாது, மேலான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாகவும் இருக்கும். அன்பான நண்பரே, நீ மெய்யான மனந்திரும்புதலைப் பெற்றவரா? இல்லையேல் இன்றே மனந்திரும்பு. தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்.