கிருபை சத்திய தின தியானம்

மே 1                     பெரிய காரியங்கள்               எரே 45 :1 – 5

‘நீ உனக்கு பெரிய காரியங்களைத்

தேடுகிறாயோ தேடாதே.’ (எரேமியா 45 : 5)

     அருமையான சகோதரனே! சகோதரியே! இந்த உலகத்தில் பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறாயா? இந்த உலகத்தில் அநேகக் காரியங்கள் பெரியவைகளாக  காணப்படுகின்றன. அவைகளைப் பெற அவைகள் பின்னால் போய்க்கொண்டிருக்கிறாயா? தேவன் சொல்லுகிறார்  அவைகளைத் தேடாதே.’ அவைகளைத் தேடி பிரயோஜனமில்லை. ஒருவேளை நீங்கள் அது எப்படி? அவைகளைத் தானே மக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆம்! உலக மக்கள் அப்படி செய்கிறார்கள், உண்மைதான். அதனால் நானும் அப்படியே செய்வேன் என்று சொல்லுகிறாயா? மனிதன் மேலும் மேலும் தேடிக்கொண்டிருக்கிறான். அவன் முடிவில்லாமல் தேடிக்கொண்டேயிருக்க விரும்புகிறான்.

      ‘இதோ மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அன்பானவர்களே! இவைகள் யாவும் முடியும்படியான வேளை உண்டு. இவைகள் அனைத்தையும் தேவன் ஒரு முடிவுக்கும் கொண்டுவருவார்.  அப்பொழுது அவைகளின் பிரயோஜனமென்ன? நீ தேவனைத் தேடாமல் இவைகளையே தேடிக்கொண்டிருக்கிறாய். ஒரு வேளை தேவனைத் தேடுவதை, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நீ எண்ணலாம், அல்லது வேதம் சொல்வது உண்மை என்று எப்படி நாம் எடுத்துக்கொள்ளமுடியும் என்று சொல்லலாம்.

     ஆனால் தேவன் உன்னைப்பார்த்து அழைப்பது என்ன தெரியுமா? ‘மதிகேடனே’ தன்னுடைய களஞ்சியங்களை நிரப்பி பூரிப்பாயிருந்த மனிதனைப்பார்த்து தேவன் இவ்விதம் ஒரு கேள்வி கேட்டார். ‘உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துகொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்? என்றார். முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தை வைக்கும்போது மற்ற எல்லாம் அதினதின் இடத்தில் சரியாக இருக்கும். முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தை வைக்காதபோதோ, எல்லாம் அழிவுக்கு ஏதுவாகவேயிருக்கும். நீ எவைகளைத் தேடி ஓடுகிறாய்?