மார்ச் 11 

      “தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்”

(யோவேல் 2:21)

      கர்த்தர் பெரிய காரியங்களை நம் வாழ்க்கையில் செய்கிறேன் என்று சொல்லுகிறார். ஆகவே நாம் பயப்பட வேண்டியதில்லை. வில்லியம் கேரி என்ற தேவ மனிதன்: “தேவனிடத்தில் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார். தேவனுக்கென்று பெரியக் காரியங்களைச் சாதி” என்று சொன்னார். ஒரு மெய்க் கிறிஸ்தவன் தேவனுக்கென்று பெரியக் காரியங்களைச் செய்யும் படியாக கர்த்தர் அவனுடைய வாழ்க்கையில் கிரியையை நடப்பிக்கிறவராக இருக்கிறார்.

      “தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?” (சங்கீதம் 71:19) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் தேவன் பெரியக் காரியங்களைச் செய்யும்படியாக திட்டங்களைக் கொண்டிருக்கிறார். அவருடைய கரத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் பொழுது, நம்மைக் கொண்டும் பெரிய காரியங்களை தேவன் செய்து, அதன்மூலம் தம்முடைய கிருபையை விளங்கப்பண்ணுகிறவராக இருக்கிறார். ஆகவேதான் கர்த்தர்: “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்”(எரேமியா 33:3) என்று சொல்லுகிறார்.

      அருமையானவர்களே! நம் வாழ்க்கையில் நாம் விசுவாசிக்கிற தேவன் மிகப்பெரியவர். அவர் ஒருவரே தேவன். அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக மாற்றக் கூடியவர். நம்முடைய எளிய விசுவாசத்தையும் கர்த்தர் கனப்படுத்துகிறார். அந்த விசுவாசத்தைப் பெரிய காரியங்களுக்கு அடித்தளமாக அமையப் பண்ணுகிறார். ஆகவே நம் வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். அப்பொழுது தேவன் நம்மை பெரிய காரியங்களைச் செய்யப் பயன்படுத்தப்படுகிறவர்களாக மாற்றுவார். நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழுவாய் என்பதில் சந்தேகமில்லை.