பிப்ரவரி 25

“வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்”

(யோவான் 7:38).

      இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வேத வாக்கியத்தை சார்ந்து, சகலத்தையும் செய்தார் என்று வேதத்தில் பார்க்கிறோம். அவர் தேவகுமாரனாக இருந்தாலும் அவர் வேத வாக்கியத்துக்குப் புறம்பாக ஒருக்காலும் செயல்படவில்லை. வேத வாக்கியத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து அதன்படி வாழ்ந்தார். வேதவாக்கியம் சொல்லுகிறபடி  நாம் வாழ்வதையே தேவன் எதிர்பார்க்கிறார். வேதத்திற்கு புறம்பான காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் கொண்டிருப்பது ஒருபோதும் நமக்கு ஆசீர்வாதமாக இருக்காது.

      இன்றைக்கு அநேகர் வேதத்திற்கு புறம்பாக சபைகளில் அதிகமாக ஓசையை எழுப்பி இசை இசைத்து பரிசுத்த பயமில்லாமல் ஆண்டவருடைய சபையை பரிசுத்தக்குலைக்கிறவர்களாக இருப்பதை நாம்  பார்க்கிறோம். ஆனால் அவருடைய வார்த்தையை முக்கியமாக மையப்படுத்தி, பாவங்களைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் மக்கள் மத்தியில் போதிக்கப்படாத ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது ஒரு பரிதாபமான நிலையாகும். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று சொல்லுகிறார்.

      வேதவாக்கியம் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் விசுவாசத்தைத் தரும். “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:10) என்று பவுல் எழுதுகிறார். இன்றைக்கு அநேகர் தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, வேதம் முக்கியப்படுத்தாத காரியங்களை  முக்கியப்படுத்தப் பார்க்கிறார்கள். ஆராதனையில் சாட்சிகள் என்று சாட்சி சொல்லும் நேரங்களும், அற்புதங்கள் அடையாளங்கள் என்றும், அந்நிய பாஷைகளை பேசிக்கொண்டு அதன் மூலமாக விசுவாசம் வருமென்கிறார்கள். ஒருக்காலும் நம்முடைய வாழ்க்கையில் அவைகள் விசுவாசத்தைக் கொண்டுவராது. கர்த்தருடைய வசனம் மட்டுமே நம்முடைய விசுவாச வாழ்க்கையைக் கட்டி எழுப்பும்.