மார்ச் 5    

“தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நாணி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்” (மீகா 3:7).

     சபையில் வேதம் மையமாக இருக்கிறதா? இன்றைக்கு அநேகர் தரிசனம் என்ற பெயரில் பல காரியங்களைச் சொல்லுகிறார்கள். தீர்க்கதரிசனம் என்று சொல்லி பொய் சொல்கிற அநேக ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தேவனால் அனுப்பப்பட்டவர்கள் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையின் மூலமாக கர்த்தர் நம்மோடு பேசுகிறார். அப்படியானால் ஊழியர்கள் செய்யவேண்டியது என்ன? தீர்க்கதரிசனம் என்ற பெயரில் காணப்படுகிற வார்த்தைகளையும், தரிசனம் என்று சொல்லிக்கொண்டு பலவிதமான காரியங்களை பேசுவதை விட்டு, ஜனங்களுடைய பாவத்தைக் கண்டித்து உணர்த்தவேண்டும்.

      “யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்” (மீகா 3:8). மக்களுடைய பாவங்களை எடுத்துச்சொல்லி, அவர்களைத் தேவன் பக்கமாக திருப்பவேண்டிய ஊழியர்கள் இன்றைக்குத் தேவை. பாவத்தையும், பாவத்தை போக்கும் படியான வழியையும் மறைத்து, ஆசீர்வாதம் என்று சொல்லும்படியான ஊழியர்கள் நம் மத்தியில் மலிந்து கிடக்கிறார்கள்.

      செல்வங்கள், அடையாளங்கள், அற்புதங்கள் ஒரு மனிதனைப் பரலோகம் கொண்டு செல்லுமா?   இன்றைக்கு அவ்விதமாக மோசம் போனவர்கள் எத்தனையோ பேர் உண்டு. தங்களுடைய வாழ்க்கையில் இரட்சிப்பைக் குறித்தும், மீட்பைக் குறித்தும், வருகிற மோட்சத்தை குறித்தும் உணராதவர்களாக இந்த உலகைக் கடந்து போய்விட்டார்கள். உங்களுக்கு போதிக்கிற ஊழியர்கள் வேதத்தைப் போதிக்கிறார்களா? பாவத்தையும், நீதியையும், நியாயத்தீர்ப்பையும் கண்டித்து உணர்த்துகிறார்களா? ஆராய்ந்து பாருங்கள். மேற்பூச்சாக உங்களுடைய வாழ்க்கையில் பல காரியங்களைச் சொல்லி, உங்களை இரட்சிப்புக்கு ஏதுவாக வழி நடத்தாத போதகர்களையும், ஊழியர்களையும் நம்பாதே. அவர்கள் மோசம் போக்குகிறவர்கள்.