நவம்பர் 25        

      “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்” (அப்போ 17:11)

      இங்கு பெரோயா பட்டணத்தின் மக்களை தெசலோனிக்கேயர் பட்டணத்து மக்களோடு ஒப்பிட்டு வேத வசனம் பேசுகிறது. இங்கு பெரோயா பட்டணத்து மக்களின் மனோவாஞ்சையை நாம் பார்க்கிறோம். அது எவ்விதம் காணப்பட்டது? அது கர்த்தருடைய வசனத்தை ஆராய்ந்து அறிவதில் காணப்பட்டது. ஆதலால் அவர்கள் மற்ற பட்டணத்து மக்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாகக் காணப்பட்டார்கள். “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்;” (நீதி 1:5) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வசனத்தை ஆராய்கிறோமா? தேவனுடைய வசனத்தில் மனோவாஞ்சை இருக்கிறதா? வேதம் சொல்லுகிறது தேவனுடைய வசனத்தைக் கேட்டு அறிவில் தேறுவான் என்கிறது.

      “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்” (சங் 119:97) என்று சங்கீதக்காரன் தன் வாஞ்சையை வெளிப்படுத்துகிறான். கர்த்தருடைய வார்த்தையை நாம் அசட்டைப் பண்ணும்பொழுது அநேக நல்ல ஆவிக்குரிய சிலாக்கியங்களை நாம் இழந்துவிடுவோம். எங்கு தேவனுடைய வார்த்தை புறக்கணிக்கப்படுகிறதோ அங்கு சீர்கேடு ஆரம்பமாகிறது என்று பொருள். தேவனுடைய வசனம் ஒவ்வொன்றும் புடமிடப்பட்ட பொன், வெள்ளியைப் போன்றதாகும். “உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்” (சங் 119:100) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். ஆம்! கர்த்தருடைய வசனத்தைக் கைக்கொள்ளும்பொழுது முதியோரைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாக்கும். ஆகவே நாம் கர்த்தருடைய வார்த்தையில் பயபக்தியுள்ளவராக இருந்து, அதின் படி செய்ய கவனமுள்ளவர்களாக இருக்கும்பொழுது கர்த்தர் நம்மை அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமில்லை.