கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 14               ஜாக்கிரதையாயிரு                 ரோமர் 12 : 1 — 12

‘அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்’ ரோமர் 12 : 11

       அநேகர் உலகப்பிரகாரமான அநேகக்காரியங்களில் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். ஆனால் ஆவிக்குரிய காரியங்களிலே ஜாக்கிரதை காண்பிப்பதில்லை. ஆனால் வேதம் ஆவிக்குரிய காரியங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று அநேக இடங்களில் நம்மை எச்சரிக்கின்றது.’ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் ( 1பேதுரு 4 : 7) அநேகர் ஜெபிப்பதே இல்லை. பிசாசும் ஜெபிக்கமாட்டான். ஜெபத்திற்க்கு செலவு செய்யவேண்டிய நேரத்தை, மற்றவைகள் திருடிக்கொள்ளும் என்பதை அறியுங்கள். ஜெபத்திற்கு பல தடைகள் வரும். நீ ஜாக்கிரதையாயிராவிட்டால் ஜெபிக்க முடியாது. ஜெபிக்கவில்லையென்றால் நீ ஆவிக்குரிய வாழ்வில் வெற்றியோடு ஜீவிக்கமுடியாது. சோதனையில் விழுந்துவிடுவாய்.

      ;உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். இந்த உலகத்தில் அநேகக்காரியங்களைக் குறித்து உறுதிசெய்துக் கொள்ளும்படி நாம் விழிப்பாயிருக்கிறோம். நம்முடைய வேலையைக் குறித்து, பணத்தைக் குறித்து, படிப்பைக்குறித்து இன்னும் எத்தனையோ காரியங்களைக்குறித்து உறுதிப்படுத்திக்கொள்ள நாம் ஜாக்கிரதையாயிருக்கிறோம். அது தவறு என்றில்லை, ஆனால் நீ தேவனுடைய பிள்ளையாக இருக்கிறாயா? தேவன் உன்னை இரட்சிக்கிறாரா? நீ மரித்தால் பரலோக ராஜ்யம் செல்வாயா? என்பவற்றை பற்றியும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியமில்லையா? அன்பானவரே! உன் வாழ்க்கையின் முடிவில் இதைக்குறித்து ஜாக்கிரதையாக இருக்கவில்லையென்றால், நீ தேவனிடத்தில் என்ன பதில் சொல்லுவாய்?.

       ‘நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு’ (வெளிப்படுத்தல் 3 : 19) நீ மனந்திரும்பாவிட்டால் தேவனுடைய பிள்ளையாக மாறமுடியாது. மனந்திருபி சிறுபிள்ளையைப்போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் நீ பிரவேசிக்கமுடியாது என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. மனந்திரும்புவதற்கு ஜாக்கிரதை வேண்டும்.