கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 25        அவரை விசுவாசிக்கிறவன்வெட்கப்படுவதில்லை     ரோமர் 10:1-12

“அவரை விசுவாசிக்கிறவன் எவனோ

அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது” (ரோமர் 10:11).

    கர்த்தரை விசுவாசிப்பவர்கள் யாரும் நிச்சயமாக வெட்கப்படுவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் நாம் வெட்கப்பட்டு போய்விடுவோமோ என்று எண்ணவேண்டிய அவசியமில்லை. தேவனுடைய ஜனங்கள் அவரை விசுவாசிப்பவர்கள் ஒருக்காலும் வெட்கப்பட்டு போகமாட்டார்கள். ஏசாயா 28:26 –ல் “விசுவாசிக்கிறவன் பதறான்” என்று சொல்லுகிறார். நீ வெட்கப்படவும் தேவையில்லை, பதறவேண்டிய அவசியமும் இல்லை. கர்த்தருக்கு காத்திரு, திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு.

       உன்னுடைய வாழ்க்கையில் நீ எதிர்பார்க்கிற காரியங்களைக் குறித்து, தேவனிடத்தில் ஜெபித்து அவருடைய சித்தத்திற்கும், அவருடைய வழிநடத்தலுக்கும் காத்திரு. நீ பதறவேண்டிய தேவையே இல்லை. அவர் எப்பொழுதும் உனக்கு சிறந்ததையே கொடுக்கிறவராக இருக்கிறார். இதை நீ எப்பொழுதும் நினைத்துக் கொள். இன்னுமாக தேவன், ஏசாயா 49:23 –ல் “நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்” என்று சொல்லுகிறார். அவர் கர்த்தர். தேவாதி தேவன். சகலத்தையும் படைத்தவர். சர்வ ஞானம் கொண்ட அவருக்கு நாம் காத்திருக்கும்பொழுது ஒருக்காலும் வெட்கப்பட்டு போகமாட்டோம்.

        மேலுமாக எரேமியா தீர்க்கதரிசி, “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (எரே 17:7) என்று சொல்லுகிறார். ஆகவே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுவோம். கர்த்தர்மேல் வைக்கிற நம்பிக்கை ஒருக்காலும் தளர்த்தி விடக்கூடாது. சாத்தான் எப்பொழுதும் உன்னுடைய விசுவாசத்தை தாக்குகிறவனாகவே காணப்படுவான். பலவிதமான நெருக்கங்கள் சோதனைகள் உண்டாகும்பொழுது, நாம் பதறவேண்டிய அவசியமில்லை. அமரிக்கையும், நம்பிக்கையுமே நமக்கு பெலனாக இருக்கும். தேவன் உன்னை வெட்கப்பட விடமாட்டார் என்பதில் உறுதியாயிரு. கர்த்தர் உன் விசுவாசத்தைக் கனப்படுத்துவார்.