“என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 31:14).

தேவன் தம்முடைய பிள்ளைகளை உரிமையோடு என் ஜனங்கள் என்று சொல்லுகிறார். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் அவரை என் தேவன் என்று சொல்லி, எப்பொழுதும் அவரைப் பற்றிக்கொள்ளும்படியாக நாம் வாழுகிறோமா என்பதைச் சிந்திக்க வேண்டியது அவசியம். எவ்வளவு சீக்கிரம் உலகம், மாம்சம், பிசாசு நம்மைத் தாக்கும்பொழுது நாம் தேவனுடைய வழியை விட்டு விலகிப்போய் விடுகிறோம். ஆனால் தேவன் தம்முடைய பிள்ளைகளை என் ஜனங்கள் என்று அழைக்கிறார். கர்த்தர் கொடுப்பது எதுவுமே நன்மையானது. நம்முடைய வாழ்க்கையில் நாம் நன்மை என்று கருதிக் காரியங்களை தேடப் பார்க்கிறோம். ஆனால் வேதம் அதைக் குறித்து எச்சரித்து, மனிதனுக்குச் செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு ஆனால் அவைகள் மரண வழிகள். நம்முடைய வாழ்க்கையில் தேவன் நம்மை வழிநடத்தும் பாதையில் நாம் திருப்தியாய் காணப்படுகிறோமா? அவர் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவோம் என்று வேதத்தில் பார்க்கிறோம். நாம் தேவனைச் சார்ந்துகொண்டு வாழும்பொழுது, நம்முடைய வாழ்க்கையில் கொடுக்கப்படுகிற எல்லாவற்றிலும் நாம் திருப்தியாகக் காணப்படுவோம். இஸ்ரவேல் மக்கள் திருப்தியில்லாததினால் முறுமுறுத்தார்கள். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவருக்குள்ளும் அவர் கொடுக்கிற நன்மையிலும் திருப்தியைக் காணும்பொழுது அது நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாகக் காணப்படும். மெய்யான தேவ பிள்ளைக்கு இருக்கும்படியான ஒரு திருப்தி, தேவன் கொடுக்கும்படியானவைகளில் பெற்றுக்கொள்ளும் நிறைவு. இந்த உலகம் ஒருபோதும் நம்மைத் திருப்திப் படுத்த முடியாது என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் தேவன் நமக்குக் கொடுக்கின்ற நன்மைகளில் திருப்தியாக வாழக் கற்றுக்கொள்வோம் என்றால் நிச்சயமாக நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கும்.