“இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்” (1பேதுரு 1:6).

கர்த்தருக்குள்ளான சந்தோஷம் என்பது நம்முடைய வாழ்க்கையில்  நாம் இந்த உலக அளவில் எவ்விதமாய் இருக்கிறோம் என்பதின் நிலையில் அல்ல. இந்த இடத்தில் பேதுரு சொல்லுகிறார், மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள் என்று. இந்த மக்கள் எந்த சூழ்நிலையில் இவ்விதமாய் வாழுகிறார்கள்? இப்பொழுது கொஞ்ச காலம் பலவிதமான சோதனைகளால் துக்கப்படும்பொழுது, இந்த உலகத்தின் சோதனைகள் நெருக்கங்கள் கர்த்தருக்குள்ளான சந்தோஷத்தை ஒருக்காலும் எடுத்துப்போட அவசியமில்லை. இரட்சிப்பின் சந்தோஷம் என்பது நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்குள்ளான ஒரு சந்தோஷமான வாழ்க்கைக்கு ஒரு ஆரம்பமாயிருக்கிறது. அது தொடர்ச்சியாக எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய வாழ்க்கையில் காணப்படும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இந்த உலகப்பிரகாரமாக எந்த நெருக்கத்தின் வழியாய்க் கடந்துபோனாலும் பலவிதமான  வியாதிகள் போராட்டங்கள் வந்தாலும் கர்த்தருக்குள்ளான சந்தோஷம் உங்களைவிட்டு எடுக்கப்பட முடியாது. ஏனென்றால் என்னை நேசிக்கிற ஒரு தேவன் உண்டு அவர் எனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிறவர். தம்முடைய சொந்த குமாரனைக் கொடுத்தவர். எனக்காகத் தன் ஜீவனைக் கொடுத்தவர். மற்றஎல்லாவற்றையும் கூடக் கொடுக்காதது எப்படி? ஆகவே பலவிதமான சோதனைகள் என்னுடைய வாழ்க்கையில் என்னை நசுக்கும்படியாக அல்ல என்னை உருவாக்கும்படியாக. என்னை இன்னுமாக ஆண்டவருக்கு நெருக்கமாக கொண்டுவரும்படியாக, இன்னுமாக நான் தேவனில் மாத்திரமே என்னுடைய நிறைவையும் சந்தோஷத்தையும் காணமுடியும் என்பதை நிரூபிக்கும்படியாக. அருமையானவர்களே! கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை. ஆனால் இந்த மகிழ்ச்சி உலகத்தை சார்ந்தது அல்ல.  இது கிறிஸ்துவுக்குள்ளான மகிழ்ச்சி.