“உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3).

எத்தனை வேளைகளில் நம்முடைய மனம் அங்கலாய்க்கிறது. சோர்ந்துப்போகிறது. அருமையானவர்களே! தேவனை பற்றிக் கொள்ளுகிற உறுதியிலிருந்து பின்வாங்காதே. பல போராட்டங்கள் நெருக்கங்கள் உங்கள் வாழ்க்கையில் வரலாம். ஆனாலும் தேவனைப் பற்றிக்கொள்ளுகிற காரியத்திலிருந்து பின் வாங்காதே. ஆம், இன்னும் கொஞ்சக் காலம். நம்முடைய வாழ்க்கையின் போராட்டங்கள் ஓய்ந்துப்போகும். தேவன் நிச்சயமாக உன்னுடைய வாழ்க்கையில் உன்னை கைவிடமாட்டார். உங்களுடைய நம்பிக்கை தேவன் மேல் மாத்திரமே இருக்கட்டும். சூழ்நிலையைப் பார்த்து பயப்பட வேண்டாம். மனிதர்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஆண்டவருடைய வார்த்தையின் மேல் உங்கள் உறுதி இருக்கட்டும். கர்த்தருடைய வசனம் உங்களை பலப்படுத்தட்டும். இந்த சூழ்நிலையிலும் பூரணமான சமாதானத்தைக் கொடுத்து தேவன் உன்னை காத்துக்கொள்வார். உன்னுடைய விசுவாசத்தை தளரவிடாதே. நல்ல போராட்டத்தை போராடினேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்று சொன்னப் பவுலைப் போல, ஆண்டவருடைய சத்திய வசனங்களில் இருந்து விலகிவிடாதே. இந்த உலகம் உன்னை பின்னிட்டு இழுக்கும்படியாக பலவிதமான சோதனைகளை முன்வைக்கலாம். ஆனாலும் நீ மனம்தளராதே. அவைகளுக்கு ஒருநாளும் இணைங்கிக்கொடுக்காதே. ஏனென்றால் தேவன் பூரண சமாதானத்தோடு உன்னைக் காத்துக்கொள்ள வல்லவராய் இருக்கிறார். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் படுகிற பிரயாசங்களுக்கு பலன் இல்லாமல் போகாது. தளர்ந்துபோகாமல் உறுதியாய் தேவனைப் பற்றிக்கொள்ளுகிற விசுவாசமும் நம்பிக்கையும் இன்னும் அதிகமாய் உன்னில் காணப்படட்டும். கர்த்தர் உன்னைப் பாதுகாத்து வழிநடத்துவார்.