கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 15                       அழகான முகம்                    யாக்கோபு 1:16–27

“ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதன்படி செய்யாதவனானால்,

கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப்

பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்” (யாக் 1 : 23)

    தேவனுடைய வார்த்தையை அற்பமாக ஒருபோதும் எண்ணாதே. அவைகள் மனிதனுடைய வார்த்தைகள் அல்ல.  தேவனுடைய வார்த்தைகள். என்ன நோக்கத்திற்கென்று கொடுக்கப்பட்டிருக்கின்றன பாருங்கள். தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் அதாவது அவன் முழுமையானவனாக உருவாகும்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுமையான வளர்ச்சியில் இரண்டு காரியங்கள் நடைபெறுகின்றன. ஒன்று தீமை நீங்குவது, இரண்டாவது நன்மை சேர்ப்பது. அதாவது நீ ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது அதில் உன்னையே கண்ணாடியில் காண்பதைப்போல காண்கிறாய். உன்னில் உள்ள தீய சுபாவத்தை, பாவத்தன்மையை அது காட்டுகிறது. உன்னில் காணப்படும் அழுக்கைக் காட்டுகிறது. உன் முகத்தில் உள்ள அழுக்கை நீயே  பார்க்கமுடியாது. ஆனால் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்பொழுது உன்னை நீ அறிந்து கொள்ளமுடியும்.

    அநேக சமயங்களில் நாம் நம்மை நல்ல கிறிஸ்தவன் என்று எண்ணிக்கொண்டிருப்போம். ஆனால் தேவனுடைய வார்த்தை என்ற கண்ணாடியில்  நம்மைக் காணும்போது, அந்த அழுக்கை உணர்ந்து அதை நீக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு நாளும் தேவ வார்த்தையண்டைவா. கர்த்தருடைய வசனம் என்ற வெளிச்சத்தில், கண்ணாடியில் உன்னைப்பார். அது உனக்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும் முகத்தில் அழுக்கு நீக்கப்படும்போது அந்த முகத்தின் அழகு இன்னும் அதிகமாகக் காணப்படும். அழுக்கான முகம் எப்படியிருக்கும் என்றும், அழுக்கில்லாத முகம் எப்படிக் கழுவினதாக, சுத்தமானதாக இருக்கும் என்பதையும் யோசித்துப்பாருங்கள். உனக்கு அழகான கிறிஸ்துவின் முகம் வேண்டுமா? அல்லது அழுக்கான பாவ முகம் வேண்டும்? கர்த்த்ருடைய வார்த்தை அழகான முகத்தை பெற உனக்கு உதவும். கிறிஸ்த்துவின் சாயல் உன்னில் காணப்படும்.