செப்டம்பர் 13
‘மிருக குணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.’ (சங்கீதம் 92:6)
மனிதனின் குணத்தைக் குறித்து இவ்விதம் வேதம் சொல்லுகிறது. ஒருவேளை இது கடூரமான வர்ணிப்பாகக் காணப்பட்டாலும் வேதம் மனிதனின் உண்மை நிலையை வெளிப்படுத்துகிறது. பாவத்தின் வீழ்ச்சியானது மனிதனில் இவ்விதமான தன்மையுள்ளவனாய் மாற்றிற்று. ஆதாம் ஏவாளின் வீழ்ச்சியை அவர்களுடைய பிள்ளைகளிடத்தில் உடனடியாகக் காணமுடிந்தது. காயின், ஆபேல் இருவருமாக கர்த்தருக்கு பலிசெலுத்தினார்கள். தேவன் ஆபேலின் பலியை ஏற்றுக்கொண்டார். காயீனின் பலியை ஏற்றுகொள்ளவில்லை. என்னவாயிற்று? காயினின் மிருக குணம் வெளிப்பட்டது. பொறாமையுணர்வு அவனுக்குள் எழும்பிற்று. அதோடு நின்றுவிடாமல் அது செய்கைப்பூர்வமாக வெளியாயிற்று. ஆபேலை காயீன் கொன்றுபோட்டான். அவன் வெறித்தனம் அவனைக் கொலைகாரனாக்கிற்று அருமையானவர்களே! இவ்விதமான குணமுள்ளவனே மனிதன். ஒருவேளை எப்போதும் அவன் மிருகமாக இல்லாததைப்போல காணப்பட்டாலும் அவனில் அந்த குணம் மறைந்திருக்கிறது. திடீரென்று அது வெளித்தோன்றி அதன் விஷத்தை கக்கும். விழுந்துபோன மனிதனின் பயங்கரம் இது!
ஆனால், இவ்விதமான மனிதனை தேவன் மாற்றுவதுதான் இரட்சிப்பு. அவனை புது சிருஷ்டியாக மாற்றுவதுதான் தேவனுடைய வல்லமை. தேவ வல்லமை அவனில் செயல்பட்டு மாற்றவில்லையென்றால் அவன் ஒருக்காலும் மாறமுடியாது. தேவனே கிரியை செய்கிறவர். தேவனே மாற்றுகிறவர். மிகவும் பரிதாபமான நிலை என்னவென்றால், இந்த மிருக குணமுள்ள மனிதன் தன்னுடைய மிருக குணத்தை விட்டு மாற அவனாகவே எவ்வளவு முயற்சித்தாலும் முடியாது. அவன் இயற்கையான நிலையில் மிருககுணமுள்ளவனாக இருப்பதையே வாஞ்சிக்கிறான். அவன் மூடன் என்று வேதத்தில் சொல்லப்படுகிறது. அவன் தேவனுடைய காரியங்களை அறியான், அறிய விரும்பவும் மாட்டான். இவ்விதமான மனிதனையே தேவன் தெரிந்துகொண்டு மாற்றுகிறார். மெய்யான விடுதலையைப் பெற்றவனாய் வாழவே தேவன் தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தி மீட்டிருக்கிறார்.