கிருபை சத்திய தியானம் 

ஆகஸ்ட் 10       பெலவீனங்களை தாங்குகிறவர்         ரோமர் 8:26-39

“அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்.

நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று

அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத

பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்” (ரோமர் 8:26).

        உங்களுடைய பெலவீனங்கள் எது? மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெலவீனங்கள். ஒருவேளை அது ஆவிக்குரிய பெலவீனமாக இருக்கலாம். அல்லது சரீர பெலவீனமாக இருக்கலாம். ஆனால் வேதம் சொல்லுகிறது, ஆவியானவர் நமக்கு நமது பெலவீனங்களில் உதவி செய்கிறவராக இருக்கிறார். அருமையானவர்களே நம்முடைய பலவீனங்களில் உதவி செய்ய ஆவியானவர் விரும்புகிறவராக இருக்கிறபடியால் நாம் அவரிடத்தில் கிட்டிச்சேருவோம். அவர் நிச்சயமாக அவர் நமக்கு உதவி செய்கிறவராகவே இருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து எபிரெயர் 4:15 -ல், “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” என்று சொல்லப்படுகிறது.

       நம்முடைய பெலவீனங்களை குறித்து மனிதர்கள் பரிதபிக்கக் கூடாதவர்களாக அல்லது உணரதாவர்களாக இருக்கலாம். ஆனால் வேதம் சொல்லுகிறது இயேசு கிறிஸ்து நமக்காக பரிதபிக்கிறார். அன்பான சகோதரனே சகோதரியே உன்னுடைய வாழ்க்கையில் எந்தொரு சூழ்நிலையிலும் அவரை நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொள். அநேக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பெலவீனகளை நோக்கிப்பார்த்து சோர்ந்து போவதுண்டு. ஆனால் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிற தேவனை நோக்கிப்பார்க்கும் பொழுது மாத்திரமே, நம்முடைய வாழ்க்கையில் அதை மேற்கொண்டு வெற்றியுள்ள ஒரு வாழ்க்கையை வாழமுடியும் என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

      சாத்தானும் கூட நம்முடைய பெலவீனங்களை பயன்படுத்தி நம்மை இன்னும் அதிகமாக பெலவீனகளுக்கு உட்படுத்தலாம். அவனுக்கு நாம் இடங்கொடாமல், நாம் கர்த்தரிடத்தில் உறுதியாக நின்று அவருடைய பெலத்திற்காக மன்றாடும்பொழுது அவர் நமக்கு இரங்குகிறவராக இருக்கிறார். “கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்” (சங் 10:17) என்று தாவீது இராஜா சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் சோர்வுகள் நம்முடைய இருதயத்தை பாதிக்கிறதாக இருக்கிறது. ஆனாலும் கர்த்தர் நம்முடைய இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறார். நம் ஜெபத்தினைக் கேட்டு நமக்கு பதிலகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. பெலவீனங்களைக் குறித்து நம்மை நாமே நொந்து போகாதபடிக்கு, நாம் தேவனை கிட்டிச் சேர இதுவும் ஒரு நல்ல தருணம் என்பதை மறந்துவிடாதே.