நவம்பர் 21    

      “பலங்கொண்டு திடமனதாயிரு;” (யோசுவா1:6)

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் திடமனதாய் இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார். ஆவிக்குரிய வாழ்க்கை என்பது தேவனுடைய பெலத்தை முழுவதுமாக சார்ந்து வாழுகிற ஒன்றாகும். உன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் சோர்ந்து போகாதே, தளர்ந்து போகாதே. கர்த்தருடைய சித்தத்திற்கு காத்திரு. ஆகவேதான் வேதம்: “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு” (சங்கீதம் 27:11) என்று சொல்லுகிறது. ஆவிக்குரிய வாழ்க்கையில் திடமனதாய் இருப்பது அதிமுக்கியமான ஒன்றாகும்.

      “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்” (ஏசாயா 35:4-5) என்று வேதம் சொல்லுகிறது. நீ மனம் பதற வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் உனக்கென்று கொண்டிருக்கிற பெரிய காரியங்களை செய்வார். “நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” (2 நாளா 32:7) என்று வேதம் சொல்லுகிறது. நமக்கு எதிரிடையாய் தோன்றுகின்ற சூழ்நிலைகளில் நாம் தள்ளாட வேண்டிய அவசியமில்லை. உன் கைகளையும், கால்களையும், இருதயத்தையும் திடப்படுத்துகிற கர்த்தர் ஒருவர் உண்டென்பதை நினைவில் கொள்.