“கர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்” (சங்கீதம் 41:4)

சங்கீதக்காரன் தன்னுடைய இக்கட்டான வேளையில் இவ்விதம் ஜெபிக்கிறார். வியாதிப்பட்ட இந்த நேரத்தில் ஒரு பக்கம் வியாதியின் பாதிப்பு மறுபக்கம் மற்றவர்கள் பேசும் பேச்சு, இவைகளினால் வருத்தப்பட்டுச் சொல்லுகிறார். தேவன் மனிதர்களைப் போலல்ல என்பதை தாவீது அறிந்திருக்கிறார். அவரிடத்தில் இரக்கம், அன்பு, மன்னிப்பு, கிருபை உண்டு. ஆகவே நான் தேவனிடத்தில் செல்லுவேன் என்கிறார். நம்முடைய வாழ்க்கையிலும் மனிதர்கள் என்ன சொன்னாலும் தேவனை நோக்கிப் பார்க்கிறவர்களாய் இருக்கவேண்டும். மற்றவர்களின் பேச்சு நம்மை முற்றிலும் சோர்புற்று கலங்கிப்போகவோ, சமாதானத்தை முற்றிலும் இழந்துபோகவோ அனுமதிக்கக்கூடாது. இவ்விதமான நேரங்கள், நம்முடைய ஆத்தும நன்மைக்காகவே அனுமதிக்கப்படுகின்றன. மனிதனைச் சார்ந்துகொள்ளாமல் தேவனைச் சார்ந்து கொள்ள, தேவன் நம்முடைய வாழ்க்கையில் இவைகளை அனுமதிக்கிறார். மனிதர்கள் நமக்கு தீமைசெய்வதைப்போல இது காணப்பட்டாலும் தேவன் நம்முடைய ஆத்தும நன்மைக்கென்று இவைகளை அனுமதிக்கிறார்.

தாவீது அந்த நேரத்தில் தேவனை சலித்துக்கொள்ளவில்லை அந்த நேரத்தில் தேவனிடத்தில் இரக்கத்திற்காகக் கெஞ்சினார். ‘ஆண்டவரே நீரே எனக்கு தஞ்சம். நீர் எனக்குத் உதவி செய்யும். ‘ஒருவேளை இந்த வியாதி அவருடைய பாவத்தின் விளைவாக அனுப்பப்பட்ட தண்டனையாக இருந்திருக்கலாம். அதனால் ஒரு பரிசுத்த பயம் அவரை ஆட்கொண்டது. இது நல்லது, இதில் தவறில்லை அவருடைய இருதயத்தை ஆராய இது நல்ல தருணமாகக் காணப்பட்டது.

ஆகவேதான் தாவீது ‘உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்’ என்று ஜெபித்தார். மேலும் அவருடைய சரீர வியாதியைக் காட்டிலும் அவருடைய ஆத்தும வியாதி கொடியதாய் இருக்கிறது என்று உணர்ந்தார். ஆகவே ‘என் ஆத்துமாவைக் குணமாக்கும்  என்று நான் சொன்னேன்.’  என்று சொன்னார். தேவன் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிற காரியம்  எதுவாக இருந்தாலும் அது நம்முடைய  ஆத்தும நன்மைக்கே என்பதை விசுவாசி.