“மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்” (ஏசாயா 35: 4). 

நம்முடைய வாழ்க்கையில் பயம் நம்மை மனம் பதறச் செய்கிறது. அநேக வேளைகளில் எதிர்காலத்தைக் குறித்த பயம், மற்றும் பலவிதமான பயங்கள் நம்மைப் பற்றிக்கொள்கிறது. பயம் நம்முடைய மனதைப் பாதிக்கிறது. நிலையற்ற விதத்தில் நம் மனம் பதுறுகிறது. ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், நீங்கள் பயப்படாதிருங்கள் என்று. மேலும் திடன்கொள்ளுங்கள் என்றும் சொல்லுகிறார். தேவன் வெறுமையாய் பயப்படாதிருங்கள் என்று சொல்லாமல், அவர் நமக்குச் செய்யும் காரியத்தைக் குறித்தும் பேசுகிறார். அவர் நீதியைச் சரிக்கட்டுகிறார். ஒருவேளை நாம் அநீதியாய்ப் பாதிக்கப்பட்டிருப்போமானால் அவர் நீதியுள்ளவராய் நம் பட்சத்திலிருந்து செயல்படுகிறார். ஒருவேளை நாம் கைவிடப்பட்டதைப் போல சோர்ந்துபோயிருப்போமானால் ஆண்டவர் நமக்குப் பதிலளிக்க வருகிறேன் என்றும் சொல்லுகிறார். அவர் வந்து நம்மை இரட்சிப்பார். என்ன ஒரு ஆறுதலும் தேறுதலுமான வார்த்தையாய் இருக்கிறது. இவ்விதமாய் நமக்கு ஆறுதல் அளிக்கக்கூடியவர் இந்த உலகில் வேறு யாராகிலும் இருக்கக் கூடுமா? நம்முடைய வாழ்க்கையில் தேவனைப் பற்றிக்கொள்வோம். ஆண்டவருடைய பாதையில் நடப்பதற்கு நம்மைத் தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம். தேவன் மிகுந்த கிருபையும் இரக்கமும் உள்ளவர். அவர் ஒருநாளும் நம்மைக் கைவிட மாட்டார்.