மே 1
“கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” (லூக்கா 16:10).
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இங்கு மிகப்பெரிய ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்விதமாக இருப்போம் என்பதைக் குறித்து இயேசுகிறிஸ்து மிகச்சிறிய ஒரு அளவுகோலைக் கொண்டு பேசும் சத்தியத்தை இங்கு பார்க்கிறோம். அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களில் நான் உண்மையாக இருப்பேன் என்று சொல்லுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் கொஞ்சத்தைக் குறித்துப் பேசுகிறார். கொஞ்சத்தில் நம் வாழ்க்கையில் கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவாதத்தை , எந்த அளவுக்கு உண்மையாக நிறைவேற்றுகிறோம் என்பதையே தேவன் பார்க்கிறார். இது எதை வெளிப்படுத்துகிறது என்று சொன்னால் அந்த மனிதனுடைய இருதய நிலையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கொஞ்சமானாலும் சரி, அதிகம் ஆனாலும் சரி, இருதயத்தில் அவன் சரி உள்ளவனாக இருப்பானானால், அதல் நிச்சயமாக பொறுப்புள்ளவனாக செயல்படுகிறவனாக காணப்படுவான்.
ஒருவேளை இன்றைய வாழ்க்கையில் ஆண்டவர் மிகச்சிறிய ஒரு பொறுப்பை உங்களுடைய வாழ்க்கையில் கொடுத்திருப்பாரானால், அதை உண்மையாய் நிறைவேற்று. அந்த காரியத்தில் உன்னை ஆசீர்வதித்து, பெரிய காரியத்தை உனக்குக் கொடுப்பார். அதேவிதமாக உங்களுடைய ஊழியத்திலும் ஆண்டவர் கொடுத்திருக்கிற சிறிய பொறுப்பையும், சிறிய ஆவிக்குரிய உத்தரவாதத்தையும், இது சிறியது என்று எண்ணி நீங்கள் அலட்சியப்படுத்தாமல், இதை ஆண்டவருக்கென்று நான் செய்கிறேன் என்று உள்ளான இருதயத்தின் நிலையோடு நீங்கள் செய்யுங்கள். அப்பொழுது ஆண்டவர் உங்களை பிற்காலங்களில் பெரிய காரியத்திற்கு பொறுப்பாளியாக நியமிப்பார். நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் எந்த வேலையிலும் நாம் எவ்விதமாக இருக்கிறோம் என்பதை முதலாவது ஆண்டவர் நம்மை சோதித்தறிந்து, பிறகு பெரிய காரியத்திற்காக நம்மைத் தெரிந்துகொள்ளுகிறார்.