மே 15
“தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்” (தானியேல் 5:27-28).
நாம் ஒவ்வொருவரும் தராசிலே நிறுத்தப்படுவோம். அப்பொழுது நாம் குறைவுள்ளவர்களாகக் காணப்படுவோமா அல்லது சரியான நிலையில் உள்ளவர்களாகக் காணப்படுவோமா என்பதே கேள்வி. அதுமட்டுமல்ல இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனும் தராசிலே சரியான நிலையில் நிற்பது என்பது கூடாத காரியம். ஆகவேதான் இந்த உலகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் குறை உள்ளவர்களாய் இராதபடிக்கு, அந்தத் தராசிலே நம்மோடு கூட நிற்கிறவராக இருக்கிறார். ஆனால் எப்பொழுது இயேசு நம்மோடு தராசிலே நிற்பவராக இருப்பார்? இந்த உலகத்தில் ஆண்டவர் நம்மோடு தராசிலே நிற்கிறாய் காணப்படுவதற்கு தகுதியானவர்கள் அல்ல. நம்முடைய பாவம் நமக்கும் அவருக்கும் இடையில் பிரிவினை உண்டாக்கப்பட்ட நிலையில், நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது.
ஆகவே நாம் தேவனோடு ஒப்புரவாகாமல், அவர் நம்மோடு தராசிலே நிற்க மாட்டார். நாம் எவ்விதம் தேவனோடு ஒப்புரவாவது என்று கேட்போமானால், நமக்கும் தேவனுக்கும் இடையில் பாவம் நிற்கிறது. ஒவ்வொரு மனிதனும் பாவத் தன்மை உள்ளவன். பாவத்தைச் செய்கிற அடிமைத்தனம் நம்மில் இருக்கிறது. நாம் ஒரு பாவி என்று உணருகிற நிலையில், இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நாம் பாவியென்று ஒத்துக்கொண்டு நம் பாவங்களை அறிக்கை செய்து, அவருடைய விலையேறப் பெற்ற மீட்பினால் நாம் தேவனோடு ஒப்புரவாக முடியும். நாம் இப்படியாக இந்த மீட்பைப் பெறவில்லையென்றால், தேவனோடு ஒப்புரவாக முடியாது. ஒருவேளை நாம் இயேசுவை நம்புகிறோம் என்று சொல்லலாம். அது இயேசுவை இரட்சகராக அல்ல, நமக்கு உதவி செய்யும் கடவுளாகவே நோக்கிப் பார்ப்பதாகும். அவரோடு நாம் என்றென்றும் வாழவேண்டுமெனில், நம் பாவங்கள் மன்னிக்கப்பட நிச்சயத்தோடு வாழுவதாகும்.