“நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்” (ஏசாயா 45:2).
நம்முடைய வாழ்க்கையில் நாம் அநேக கோணலானவைகளை நிச்சயம் சந்திக்க வேண்டியதாகவே இருக்கிறது. அநேக வேளைகளில் கோணலானவைகளை நாம் சந்திக்கும் பொழுது மிகவும் சோர்ந்து விடுகிறோம், தளர்ந்து விடுகிறோம். நாம் நம்முடைய சொந்த முயற்சியினால் அநேக வேளைகளில் கோணலானவைகளைச் சரிபடுத்த ஆசைப்படுகிறோம். ஆனால் அது இன்னும் கோணலானதாகப் போகிறதல்லாமல், நாம் அதை சரிப்படுத்தக் கூடாத நிலைக்குப் போகிறதையும் நாம் அறிந்திருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் தேவன் ஒருவரே அதைச் சரிபடுத்த முடியும் என்பதை நாம் விளங்கிக் கொள்வது நல்லது. தேவன் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் கோணலானவைகளை சரிபடுத்த முடியும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று” (ஏசாயா 40:4-5) என்று சொல்லுகிறார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் இவைகள் எல்லாவற்றையும் சரிப்படுத்தக்கூடிய தேவனுடைய கரத்தில் நாம் இவைகளை ஒப்புக்கொடுப்போம். ஆண்டவர் நமக்கு முன்பாகச் சென்று, அருமையாக சகலத்தையும் நேர்த்தியாகச் செய்து இவைகளை நிறைவேற்றித் தருவார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டு பயப்படாதேயுங்கள். சரிசெய்யக்கூடிய ஒரு தேவன் உண்டு என்பதை விசுவாசித்து அவரிடத்தில் ஜெபத்தில் சென்று உங்களுடைய எல்லாக் காரியங்களையும் ஒப்புக்கொடுங்கள். ஆண்டவர் மிக அருமையாக உங்களுடைய காரியங்கள் அனைத்தையும் அழகாகச் செய்து முடிப்பார். தேவனை நீங்கள் மகிமைப்படுத்துவீர்கள்.