மார்ச் 13               

“அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்”

ரூத் 1:14

      நகோமியின் இரண்டு மருமகள்களில் ஒர்பாள் ஆண்டவரைப் பின்பற்றுவதில் முழுமையான இருதயத்தோடு காணப்படவில்லை. அவளுடைய வாழ்க்கையைத் தானாகவே நடத்திக் கொள்ள விரும்பினாள். இன்றைக்கு அநேகர் அவ்விதமாகவே காணப்படுகிறார்கள். ஒர்பாள் ஒருவேளை தனக்கு ஏற்றதாக இருக்குமானால் ஆண்டவருடைய காரியங்களைப் பின்பற்றுவேன், ஒருவேளை எனக்கு அது ஏற்றதாக காணப்படவில்லை என்றால் நான் என் சொந்த வழியைத் தெரிந்து கொள்ளுவேன் என்று வாழ்ந்தாள்.

      ஆனால் ரூத் அதற்கு நேர்மாறாக காணப்பட்டாள். “அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” (ரூத் 1:16). நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அல்லது சூழ்நிலைகள் மாறினாலும் நம்முடைய விசுவாசத்தில் உறுதியாய் நிற்கக்கூடியவர்களாக நாம் காணப்படுவது மிக அவசியம். அது முக்கியமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவள் சொல்கிறாள். “நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்” (ரூத் 1:17).

      கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மரணமே நேரிட்டாலும், வாழ்வானாலும் தாழ்வானாலும், உயர்வானாலும் கீழாக்கப்பட்டாலும், ஆண்டவரே உம்மை விட்டு பிரியமாட்டேன் என்று தேவனோடு இணைக்கப்பட்ட வாழ்க்கையாகும். இன்றைக்கு அநேகர் கிறிஸ்தவ வாழ்க்கையில் இவ்விதமாக தேவனோடு இணைக்கப்படவில்லை. அது ஒரு ஆழமான இணைப்பாக இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் துண்டிக்கப்படலாம். நம் வாழ்க்கை அவ்விதமாக காணப்படுமானால் அது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்காது.