“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்” (யாக்கோபு 1:5-6).

ஜெபத்தில் தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். ஆண்டவருடைய சமூகத்தில் நாம் காத்திருந்து ஜெபிக்கும்பொழுது அந்த ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும் என்று மெய்யாலுமே நம்புவதில் தவறுகிறோம். நீங்கள் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோமென்று விசுவாசியுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஜெபமும் விசுவாசமும் பிரிக்கப்படகூடாத ஒன்று. நாம் அநேக சமயங்களில் ஜெபிக்கிறோம் ஆனால் விசுவாசத்தைக் கொண்டிருப்பதில்லை. கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். ஆகவே நாம் ஜெபிக்கும்பொழுது தேவன் அதைச் செய்வார் என்ற விசுவாசத்தோடு அவரைத் துதிப்போம். அநேக சமயங்களில் ஒரு விதத்தில் நாம் நம் ஜெபங்களை வீணடித்துவிடுகிறோம் என்றே சொல்லக்கூடும். ஏனென்றால் கர்த்தர் நம்முடைய ஜெபத்திற்கு பதிலளிப்பார் என்ற உறுதியானது அவருடைய வசனத்தின் மூலமாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும்பொழுது நான் ஏன் சந்தேகப்பட வேண்டும்? விசுவாசத்தோடு செய்கிற ஜெபம் வீணல்ல. ஆகவே தேவனுடைய காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் முழு மனதோடு நம்புவோம். ஜெபத்தின் வல்லமை மிகப் பெரியது.