“ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்”(1 கொரிந்தியர் 9:26).
இந்த உலகத்தில் எதைக் குறித்து நிச்சயமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் நிச்சயமில்லாமல் ஓடுவது மிக மிக அபாயமானது. அநேகரின் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு நோக்கமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது அவர்களின் இலக்கு இந்த உலகத்திற்குரியதாகக் காணப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை இவ்விதமாக இருக்கிறதா? அல்லது பவுலைப் போல நான் எதற்காக அழைக்கப்பட்டேனோ அதற்காக ஆசையாய்ப் பின்தொடருகிறேன் என்று சொல்லக்கூடியதாக இருக்கிறதா? இன்றைக்கு அநேகர் உலக ஆசீர்வாதங்களுக்காகத் தேவனைத் தேடுகிறார்கள். ஆனால் அது மெய்யான பக்தியுமல்ல, தேவனைத் தேடுகிற வழிமுறையுமல்ல. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், பின்பு இவைகள் எல்லாம் கூடக் கொடுக்கப்படும் என்று தேவன் அழகாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை நாம் உலகத்தின் ஐஸ்வரியத்தைத் தேடிப் பெற்றுக்கொண்டால், அவைகளோடு தேவன் வேதனையும் கூட்ட மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயமுண்டு? தேவனாகக் கொடுக்கின்ற ஐஸ்வரியத்திற்கும், நாமாகத் தேடிப் போகிற ஐஸ்வரியத்திற்கும் இதுவே வித்தியாசம். தேவன் கொடுக்கிற ஐஸ்வரியத்தோடு அவர் வேதனையைக் கொடுக்க மாட்டார். ஆகவே நாம் ஆவிக்குரிய நிச்சயத்தோடு ஓடுவது மிக அவசியம். நாம் மரிக்கும்பொழுது பரலோக ராஜ்யத்தில் அவரிடத்தில் கிட்டிச்சேர்வது முக்கியம்.