பிப்ரவரி 23

 “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” (யோவான் 15:9).

பாவியாகிய என்னை, பிதா குமாரனை நேசிக்கும்படியான அளவில் இயேசு கிறிஸ்து என்னை நேசிப்பார் என்றால் அது முற்றிலும் விளங்கிக்கொள்ளக் கூடாத காரியம். ஆனாலும் வேதம் சொல்லுகிறது. அதை நம்புகிறேன். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய நம்பிக்கையூட்டும் செய்தியாக இது இருக்கிறது. வாழ்க்கையின் எந்த சூழ்நிலைகளிலும் என்னை நேசிக்கும் தேவன் ஒருவர் இருக்கிறார். என் தகுதியின் அடிப்படையில் அல்ல, என் நற்குணங்களின் அடிப்படையில் அல்ல, நான் ஆரம்பத்தில் பாவியாக இருக்கும்பொழுதே என்னை நேசிக்க ஆரம்பித்தார். இன்றும் அவ்வாறே என்னை நேசிக்கிறார். மெய்யாலுமே இவ்விதமான வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் எல்லாச் சூழ்நிலைகளிலும் வெற்றியோடு வாழுவதற்கு நமக்கு வழிகாட்டுகிறது. என்ன ஒரு அருமையான அன்பு! இவ்விதமான அன்பை நான் இந்த உலகத்தில் எங்கு பார்க்க முடியும்? என்னை நேசிக்கும்படியான தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவர் இவ்விதமாக சொல்வார் என்றால் இதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு என்னவாக இருக்க முடியும்? அநேக சமயங்களில் நாம் ஆண்டவருடைய அன்பை விளங்கிக்கொள்ளத் தவறுகிறோம். அவருடைய அன்பைக் குறித்து வேதம் போதிக்கிற அளவில் அறியாமல் இருப்பதினால், நாம் சந்திக்கிற சோதனைகள், நெருக்கங்கள் மத்தியில் சோர்ந்துவிடுகிறோம். எனக்காக யாவற்றையும் செய்யக்கூடிய ஒரு அன்பே இயேசுவானவர் வெளிப்படுத்துகிற அன்பு என்பதை நான் மறந்துவிடுகிறேன். என்னுடைய வாழ்க்கையின் பிரச்சனை என்னவென்றால் தேவ அன்பை முழுமையாக அறியாமல் இருப்பதே. ஆகவே இந்த அன்பைக் குறித்து நாம் மேன்மை பாராட்டுவோம். இந்த அன்பை நாம் நம்முடைய வாழ்க்கையில் மெய்யாலுமே கனப்படுத்துவோம். இந்த அன்பின் தேவனை கனப்படுத்துவோம். அப்போது நம்முடைய வாழக்கை மகிழ்ச்சியுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.