கிருபை சத்திய தின தியானம்

 மே 11                  கவலைப்படுகிறதினால் என்ன பயன்?           லூக் 12:25–34

‘கவலைப்படுகிறதினால் உங்களில் எவன்

தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்’ (லூக் 12: 25).

    கவலை மனிதனோடு  ஊறிப்போன ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு மனிதர்களின் கவலைகளையெல்லாம் கணக்கிட்டால் இந்த உலகத்தைபோல பன்மடங்கு பெரியதாயிருக்கும், கவலைப்பட்டே தங்கள் காலத்தை அழித்தவர்களும், அழிக்கிறவர்களும் உண்டு. ‘கவலைப்படாதிருங்கள்’  என்று ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார். கவலைப்படும்போது அது ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்படியாமையைக் காட்டுகிறது. தேவன் எதைச்செய்யக்கூடாது என்று சொல்லுகிறாரோ அதையே செய்கிறோம்.

    நீ உன்னுடைய வாழ்க்கைக்காக, எதிர்காலத்திற்காக ஞானமாய் திட்டமிடுவது தவறல்ல. ஆனால் அதிலும் கர்த்தருடைய சித்தத்தையும் அவர் வார்த்தையையும் அறிந்து திட்டமிடவில்லையென்றால் அது உனக்கு அநேகவிதங்களில் இடறலாயிருக்கும். ஆனால் திட்டமில்லாமல் கவலைப்படுவது பாவம். ஆண்டவர் நம்மிடத்தில் பார்த்துக் கேட்கும் கேள்வி என்ன? கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக்கூட்டுவான்? ‘அதாவது உன் கவலையினால் உன் சூழ்நிலைகளை, உன் பிரச்சனைகளை இன்னும் கவலைக்குக் காரணமானவைகளை உன்னால் ஒன்றும் மாற்றமுடியாது’. அடுத்த வசனத்தில் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார். 

      ‘மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? தேவனாக ஒருகாரியத்தை மாற்றாமல் நீ அதில் ஒரு இம்மியளவு கூட ஒன்றும் செய்யமுடியாது, மாற்றமுடியாது’. ‘அற்பகாரியம் முதலாய்’  என்று சொல்லப்பட்டிருப்பதை ஆழமாக உங்கள் இருதயங்களில் பதித்துக் கொள்ளுங்கள். உங்களால் இதில் ஒன்றும் செய்யமுடியாது என்று வேதம் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்னால் முடியும் என்று சொல்லுவதில்தான் உன்னுடைய பிரச்சனை இருக்கிறது. ஆகவே நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறீர்களா? ‘நீங்கள் ஒன்றுக்கும்கவலைப்படாமல் எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.’ (பிலி 4 : 6).