கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர்:16                             கோபம்                              2இராஜா 5:1–11

“அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப் போய்

அவன் வெளியே வந்து நின்றான்” (2இராஜா 5:11)

            கோபம் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று பாருங்கள், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், ஏனென்றால் ஏறகுறைய 200க்கும் மேற்பட்ட இடங்களில் இதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இது என்ன அவ்வளவு முக்கியமான குணமா? ஆம்! ஆதிமுதல் மனிதனைஆண்டு அடிமைப்படுத்துகிற குணம். தேவன் ஆபேலின் பலியைஅங்கிகரித்தவுடன் காயினுக்குக் கோபம் வந்து விட்டது. தன் சொந்த சகோதரனைக் கொலை செய்தான். கோபம் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. கோபம் கண்ணை மறைத்துக் குருடாக்குகிறது. ஒரு விசுவாசி தொடர்ந்து இந்த பாவத்திற்கு அடிமையாயிருக்கக்கூடாது.

            இங்கு நாகமான் சுகம்பெறும்படியாக நீண்ட பிரயாணம் செய்து இஸ்ரவேல் தேசத்திற்கு வருகிறான். அவனுக்கு வேண்டியது சுகம். ஆனால் தீர்க்கத்தரிசி அவன் எதிர் பார்த்தவிதமாக வந்து அவனைத்தடவி சொஸ்தமாக்கவில்லை என்று அறிந்தவுடன் கடுங்கோபங்கொண்டான். நன்றாய் நின்ற மனிதன் திடீரென்று வெகுண்டு எழுந்தான். கோபம் நாகபாம்பின் விஷம் போல் திடீரென்று படம் எடுத்து ஆடும். நன்றாகவே பேசிக்கொண்டிருப்பார்கள், திடீரென்று பார்த்தால் எங்கிருந்துதான் வருமோ தெரியாது, முகநாடிவேறுபடும், வார்த்தைகள் வெடியைப் போல வெடிக்கும்.

            கோபம் ஒரு மனிதனை, தன் சுயக்கட்டுப்பாட்டை இழக்கச்செய்கிறது. தான் பேசுவதில், செய்வதில், கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறான். ஒருவேளை நாகமான் அந்த கோபத்தோடே திரும்பிப் போயிருப்பானானால் அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இழப்பை அடைந்திருப்பான். நல்ல வேளை அவனுடைய ஊழியக்காரர் அவனைப்போல் கோபமடையாமல் அமைதலாய் அவனுக்கு எடுத்துரைத்தார்கள். அவன் கோபத்தோடே திரும்பி போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாயிருந்திருப்பான். சாந்தம் நன்மையைக் கொண்டுவரும். கோபம் நஷ்டத்தை ஏற்படுத்தும். கோபம் ஒரு மெய்யான விசுவாசிக்கு அழகல்ல. சாந்தமும், அமைதலுமே அவனுக்கு அழகு.