கிருபை சத்திய தினதியானம் 

பிப்ரவரி 27               கோணலும் செவ்வையாகும்            ஏசாயா 45:1-13
“நான் உனக்கு முன்னே போய்,

கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்” (ஏசாயா 45:2)

         அநேக சமயங்களில் நாம் நம்முடைய ஞானத்தைக் கொண்டும், அறிவைக் கொண்டும் கோணலானவைகளை செவ்வையாக்க முயல்கிறோம். ஆனால் அது இன்னும் அதிகமான கோணலாக மாற வாய்ப்புண்டு. ஆனால் தேவன், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையின் கோணலான சூழ்நிலைகளில் அதை செம்மையாக்கும்படியான கர்த்தரை நாம் நோக்கிப்பார்க்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் அதை எவ்விதம் செவ்வையாக்குவது என்று அறிந்து அதை செம்மைப்படுத்துவார்.
        மேலும் சொல்லுகிறார், “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும்” (ஏசாயா 40:4) என்றும் சொல்லுகிறார். இவர் சகலத்தையும் படைத்த தேவன், ஆதலால் தான் பள்ளமானது உயர்த்தப்படும், மலையானது தாழ்த்தப்படும், கோணலானவை செவ்வையாக்கப்படும். இது கார்த்தராலே மாத்திரமே கூடும் என்பதை மறவாதே. நம் வாழ்க்கையின் எந்தவித சூழ்நிலையையும் சரிபடுத்துகிறவரும், சமப்படுத்துகிறவரும் கர்த்தர் மாத்திரமே. நம்முடைய கோணலானவைகளை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். அவர் மாத்திரமே அதை எவ்விதம் நேராக்குவது என்பதை அறிந்தவர். நாம் ஒப்புக்கொடாமல் அவர் சரி செய்யமாட்டார், மேலும் நாமே சரி செய்வது என்பது மதியீனமான ஒன்று.
       “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசாயா 42:16) என்று சொல்லுகிறார். நாம் குருடர்களைப் போல இருக்கிறோம். ஆனாலும் கர்த்தர் நம்மை வழிநடத்துவேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். இருளை வெளிச்சமாகவும், கோணலை செவ்வையுமாக மாற்றுகிறவர் மாத்திரமல்ல, அதை சீர்படுத்தும் வரையிலும் நம்மை கைவிடமாட்டேன் என்று சொல்லுகிறார். இந்த தேவனை நாம் சார்ந்துகொள்ளுவதைத் தவிர, ஞானமுள்ள காரியம் வேறு எதுவாக இருக்க முடியும்?