“வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே”(யோவான் 5:39).

வேதத்தை நாம் ஆராய்ந்துப் பார்க்கும்பொழுது நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த மகத்துவமானக் காரியங்களை நாம் விளங்கிக்கொள்ள முடியும். பொதுவாக இன்றைக்கு அநேகர் இயேசு கிறிஸ்துவை ஒரு மேலோட்டமாய் அறிந்திருக்கிற அறிந்து கொள்ளுதலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதம் போதிக்கிற கிறிஸ்துவை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். நாம் கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன். இந்த வேதத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்பொழுது அதில் கிறிஸ்துவைக் காண்கிறோம். அவருடைய மகத்துவத்தை அன்பைக் காண்கிறோம். இவைகள் நமக்கு ஆவிக்குரிய விலையேறப்பெற்ற பொக்கிஷங்கள். இந்த அழிந்து போகிற உலகத்திற்காக அல்ல, என்றென்றைக்கும் அழியாத நித்திய ஜீவனுக்கடுத்த காரியங்களில் நாம் நம்முடைய மனதை செலுத்துவது மிக அவசியம். வேதத்தை நாம் ஆராய்ந்துப் பார்ப்போம். அவைகளால் நமக்கு நித்திய ஜீவன் உண்டு. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படியாக பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தேவனிடத்திற்கு வழிநடத்தும்படியான கருவியாக தேவனுடைய வசனங்களை நமக்கு வைத்திருக்கிறார். அவைகள் நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மேன்மையை விளங்கிக்கொள்ளவும் மேலும் அவருடைய அன்பில் நாம் நிலைத்திருக்கிற ஒரு வாழ்க்கையையும் வாழவும் தேவன் நமக்கு உதவிச் செய்ய முடியும். என்னுடைய அன்பில் நிலைத்திருங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். அவரை அறியாமல் அவருடைய அன்பை நாம் எவ்விதமாக விளங்கிக் கொள்ள முடியும்? அது முடியாது. ஆகவே தேவனுடைய வார்த்தை கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க செய்கிற ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அதன் மூலமாக நாம் நித்திய ஜீவனைப் பெற்றவர்களாய் மெய்யான ஆசீர்வாதத்திற்குரியவர்களாய் நாம் காணப்படுவோம்.