கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 8                   கர்த்தர் மேல் நம்பிக்கையாயிரு                       சங் 4:1-8

“நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்” (சங் 4:5).

      நாம் தேவனுக்கு முன்பாக நீதியின் பலிகளைச் செலுத்துபவர்களாக காணப்படுவது மிக அவசியமான காரியம். நாம் தேவனுக்கு முன்பாக அவருக்கு பிரியமான விதங்களில் வாழுவதே நீதியின் பலிகளை செலுத்துவதாக இருக்கிறது. “தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்”(சங் 51:19) என்று தாவீது சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழுவதே, அவருக்கு செலுத்தும்படியான நீதியின் பலியாகும்.

    அதே சமயத்தில் நம்முடைய வாழ்க்கையில்  தேவனுக்கு முன்பாக குறைகள் இருக்கும்பொழுது, நாம் செலுத்தும்படியான பலிகள் அங்கீகரிப்படாது. “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், …… முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத் 5:23) என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள், கடினமான இருதய சிந்தனைகள், கர்த்தருக்கு பிரியமில்லாத கோப தாபங்கள் இருக்கும்பொழுது, கர்த்தர் நம்பேரில் பிரியமாய் இரார்.அவைகளைக் களைந்துபோட்டு அவருடைய சமூகத்தில் வருவதையே தேவன் எதிர்பார்க்கிறார்.

     அதே சமயத்தில் நீதியின் பலிகளை செலுத்தி கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பது மிக அவசியமான காரியம். “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” (ஏசாயா 26:3,4) என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார். மெய்யாலும் நாம் தேவனை அவருக்கு நீதியின் பலிகளை செலுத்தி, அதாவது அவருக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ்ந்து அவர் பேரில் நம்பிக்கையாயிருக்கும் பொழுது, பூரண சமாதானத்துடன் நம்முடைய வாழ்க்கையைக் காத்துக்கொள்ளுவார் என்பதில் சந்தேகமில்லை. கர்த்தருக்குப் பிரியமில்லாமல் நாம் வாழும்பொழுது நாம் தேவன் பேரில் மெய்யான நம்பிக்கைகொள்ளமுடியாது.