“நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது” (சங்கீதம் 97:11).

இந்த உலகம் ஒரு இருண்ட உலகம். ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை. ஆனால் ஒரு தேவனுடைய பிள்ளைக்கு அவர் வெளிச்சத்தை வைத்திருக்கிறார். நீதிமானுக்காக வெளிச்சம் விதைக்கப்பட்டிருக்கிறது. தேவன் அதை நியமித்திருக்கிறார். தேவன் அதை தம்முடைய திட்டத்தின்படியாக அவருடைய நித்திய யோசனையின்படியாக அவர்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்திருக்கிறார். தேவனுடைய பிள்ளைகள் இருளிலே நடக்க வேண்டிய அவசியமில்லை. தேவன் அவர்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு தெரிந்துகொண்டு, குறிப்பிட்ட இலக்கை நோக்கி அவர்கள் ஓடுகிறவர்களாய் நியமித்திருக்கிறார். இவ்விதமான ஒரு ஓட்டத்திற்கு வெளிச்சம் தேவை. ஆகவே தேவன் தம்முடைய மக்களுக்கு வெளிச்சத்தை வைத்திருக்கிறார். மேலும் மகிழ்ச்சியையும் அவர் விதைத்திருக்கிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிலாக்கியம் மகிழ்ச்சி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னுடைய சந்தோஷம் உங்களில் நிறைவாய் இருக்கும்படிக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். என்ன ஒரு ஆச்சரியமான காரியம்! ஒரு தேவனுடைய பிள்ளை இருளில் நடப்பவனும் அல்ல, துக்கத்திலும் துயரத்திலும் வாழுகிறவனும் அல்ல. ஏனென்றால் அவனுடைய தேவன் வெளிச்சத்தையும் மகிழ்ச்சியையும் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். கர்த்தரைச் சார்ந்து வாழுபவர்கள் ஒருக்காலும் ஏமாந்து போக மாட்டார்கள்.