“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்”( யோபு 9:10).

பொதுவாக இந்த தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை அறிந்து உணர்ந்துக்கொள்ளுகின்றோமோ அந்தளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் அவரை மேன்மைப்படுத்தவும், நம்மைத் தாழ்த்தவும் நமக்கு அது உதவியாக இருக்கும். அநேகருடைய வாழ்க்கையில் இந்த தேவன் எவ்வளவு மகத்துவமானவர் என்பதை வேத சத்தியத்தின்படி அறிந்து கொண்டு விளங்கிக்கொண்டு வாழாததினால், தங்களையும் தங்கள் காரியங்களையும் முக்கியப்படுத்தப் பிரயாசப்படுகிற உணர்வு அவர்களில் காணப்படுகிறது. இந்த இடத்தில் யோபு சொல்லுகிறார், “ஆராய்ந்து முடியாத பெரியக் காரியங்கள் என்று.” மனிதனுடைய சிந்தைகளுக்கும் விளங்குதலுக்கும் அப்பாற்பட்டப் பெரியக் காரியங்களைச் செய்கிறவர் நம்முடைய தேவன். மேலும் அவர் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் இந்த தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை அறிந்து கொள்ளும் பொழுது, அவனுடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய சிந்தனைகளும் எண்ணங்களும் பெருகுகிறதாய் காணப்படும். அநேகருடைய வாழ்க்கையில் இந்த தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை அறியாமல் இருப்பது, அவர்கள் வேதத்தில் நாம் அவரைப் பற்றி அறிந்துகொள்வதில் எவ்வளவு குறைவுள்ளவர்கள் என்பதையே காட்டுகிறது. இந்த மகத்துவமான தேவனின் ஒவ்வொரு செயலையும் நாம் வேதத்தில் சிந்தித்துப் பார்க்கும்பொழுது நம்மால் விளங்கிக்கொள்ளக் கூடாத மிக உன்னதமான மகத்துவமான தேவன் இவர்  என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். இந்த தேவனை நாம் அறிந்து கொண்டு வாழும்பொழுது நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.