ஏப்ரல் 2
“யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது” (எரேமியா 17:1).
ஒவ்வொரு மனிதனுடைய பாவமும் அவர்களுடைய இருதயத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அதை ஆழமாக உறுதிப்படுத்தும் படியாக வைரத்தின் நுனியினாலும், இரும்பெழுத்தாணியினாலும் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. நம்முடைய பாவம் தேவனுடைய பார்வையில் மிகக் கொடியது என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக. தேவன் பாவத்தைப் பார்க்கிற வண்ணமாக நாம் பாவத்தைப் பார்க்கப் பழகவேண்டும். அநேக வேளைகளில் நம்முடைய பாவத்தை ‘நம் பலவீனம்’ என்று எண்ணிவிடுகிறோம். இது வாழ்க்கையில் நாமே நம்மை அழித்துக் கொள்வதற்கு சமம். பாவம் நம்முடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் சாட்சியாக அவனுடைய இருதயமே நியாயத்தீர்ப்பு நாளிலே நிறுத்தப்படும். அப்பொழுது நாம் அதிலிருந்து தப்பிக் கொள்ளவோ, அதைச் செய்யவில்லை என்று சாக்குப்போக்கு சொல்லியோ தப்பித்துக் கொள்வது கூடாதகாரியம்.
தம்முடைய பிள்ளைகளின் பாவங்களை நீக்கும்படியாக வந்த இயேசு கிறிஸ்து, நம் பாவங்களை மன்னிக்கவில்லையென்றால், நம் பாவம் மன்னிக்கப்படாது. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் ஒருபோதும் பாவத்தோடு விளையாடவோ அல்லது பாவம் என்பது காற்றில் கரைந்து போகிற ஒன்று என்று எண்ணிவிடவோ கூடாது. நாம் தேவனுடைய நியாய தீர்ப்பை நாமே தவிர்த்து, அதிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது. அப்படி நாம் செய்வோமானால் அது வீணான முயற்சியாக இருக்கும். நம் பாவங்களை உணர்ந்து, அதற்காக வருந்தி, நம்மைத் தாழ்த்தி தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய கிருபையை நாம் சார்ந்துகொள்வோமாக. அப்பொழுது அவர் தம்முடைய சர்வ ஏகாதிபத்தியத்துடன் செயல்படுவார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.தேவன் மன்னிக்கிறவரும் கிருபையும் உள்ளவர்.