டிசம்பர் 15    

      “நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை”(உபா 32:39)

      அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையில் அவரே தேவன். அவரைத் தவிர வேறே தேவன் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் அநேக மக்கள் கடவுள் என்று சொல்லிக்கொண்டு அநேக சிருஷ்டிப்புகளை தொழுது கொள்ளுகிறார். ஆனால் நாம் ஆராதிக்கும் தேவனே தேவன். வேறொரு தேவன் இல்லை. வேறொரு கடவுள் இல்லை.

      சங்கீதம் 102:27 -ல் “நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை”என்று வேதம் சொல்லுகிறது. அவர் நித்தியமான தேவன். நித்திய நித்தியமாய் ஆளுகை செய்கிறவராய் இருக்கிறார். இன்னுமாக ஏசாயா 41:4 ல் தேவன், “முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே”என்று சொல்லுகிறார். அவரே முந்தினவரும் அவரே பிந்தினவரும். அவரே ஆதியும் அவரே அந்தமும். நம்முடைய வாழ்க்கையில் இவ்வளவு மகத்துவமான தேவனை சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவனாக நாம் சார்ந்து கொள்ளும்பொழுது நம் வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்கிறவராக இருக்கிறார்.

      இன்னுமாக “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை”(ஏசாயா 45:18) என்று சொல்லுகிறார். சகலத்தையும் சிருஷ்டித்த தேவன் அவர். அவைகளை ஆண்டு வழிநடத்துகிறவர். உன்னுடைய என்னுடைய வாழ்க்கையை அவரே ஆளுகை செய்கிறவர். அவருடைய கரத்தில் நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்பொழுது அவருடைய மகிமைக்கு ஏதுவாக நம்முடைய வாழ்க்கையை மாற்றி வழிநடத்துவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆகவேதான் “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்”(ஏசாயா 46:4) என்று சொல்லுகிறார். நம்மை கைவிடாத தேவனை நாம் பற்றிக் கொள்ளுவோம்.