“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசுவா 1:5).
தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு இந்த உலக வாழ்க்கையில் அவர்களைத் தேற்றவும், பெலப்படுத்தவும், வழிநடத்தவும் பல வாக்குத்தத்தங்களை வேதாகமத்தில் கொடுத்திருக்கின்றார். நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு அதை நமக்குப் பிரயோஜனமாக்கி கொள்கின்றோமா என்பதை குறித்து நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. தேவன் மோசேயின் மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். “நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை” (உபாகமம் 31:6) என்று சொல்லப்பட்டது. யோசுவாவுக்கு தேவன் அந்த வாக்குத்தத்தத்தைக் கொடுப்பதை குறித்தும் நாம் பார்க்கிறோம். மேலும் “எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (2கொரிந்தியர் 1:20). தேவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற வாக்குத்தத்தங்களை நினைவுகூர்ந்து அவைகளைத் தேவனிடத்தில் உரிமையாய்ப் பெற்றுக்கொள்ளக்கூடிய சிலாக்கியத்தைக் கொண்டவர்களாய் நாம் இருக்கிறோம். அநேக வேளைகளில் தேவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற வாக்குத்தத்தங்களை நாம் உணராமல் சோர்ந்துவிடுகிறோம். தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் பற்றிக்கொள்வோம். ஸ்பர்ஜன் என்ற தேவன் மனிதர் சொல்லுகிறார், “நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவிதமாக வாக்குத்தத்தங்களை தேவன் வைத்திருக்கிறார்.” இந்த அன்பின் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் பற்றிக்கொள்ளுவோம். அது நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளில் நாம் வெற்றியோடு கடந்து செல்ல உதவும்.