கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 1         சகல ஆசீர்வாதம்              எபேசியர் 1 : 1 – 12

’அவர் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்’ (எபேசியர் 1 : 3 )

            இந்த உலகத்தில் அநேக காரியங்களை பெற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் அதே சமயத்தில் இந்த உலகத்தில் எங்கும் கிடைக்காதவைகளும் உண்டு. அவைகளை  தேவனால்தான் நமக்கு கொடுக்கமுடியும். இந்த உலக ஆசீர்வாதங்களை அநேக மக்கள்  விரும்புகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அநேகர் விரும்புவதில்லை அந்த அளவுக்கு வாஞ்சிப்பதில்லை, ஏன்? அதன் மேன்மையை, விலையேற பெற்ற உயர்வை அறியாததினால்தான். உனக்கு ஆவிக்குரிய நற்குணங்கள் தேவையில்லையா? உன் வாழ்க்கையில் அவைகள் இல்லாததினால்தான் நீ இவ்விதமான ஆவிக்குரிய தோல்வியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.’ உனக்கு ஆவியானவரின் நற்கனிகள் தேவை. உனக்கு பொறுமை, நீடிய சாந்தம் தேவை. இவைகள் இல்லாததினால் நீ அநேக பிரச்சனைகளைச் சந்திக்கிறாய், மனசமாதானத்தை இழந்து விடுகிறாய். ஆவியின் நற்கனிகள் உன்னில் இல்லாததினால் நீ பாவத்திற்கேதுவாகப் பேசுகிறாய், செயல்படுகிறாய்.

            நீ அவ்விதம் வாழவேண்டிய அவசியமில்லை ஆவிக்குரிய தரித்திரம் மிகவும் கொடியது. சரீரபிரகாரமான தரித்திரம் நீங்கிவிடும். ஆனால் ஆவிக்குரிய தரித்திரம் உன் வாழ்க்கையில், உன்னை நிர்பந்தமான மனுஷனாய் வைத்திருக்கிறது. மெய்யான ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தேவன் இவ்விதமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார், ஆசீர்வதிக்கிறார். நீ விசுவாசத்தோடு தேவனிடத்தில் சென்று அவைகளைப் பெற்றுகொள். அவருடைய கிருபையை அண்டிக்கொள். தேவனிடத்தில் ஜெபி. தேவன் உனக்கு கிறிஸ்துவின் மூலமாய் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற இயேசுவின் சிலுவையை விசுவாசத்தோடு நோக்கிப்பார். நீ ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதை உணர்வாய். அவைகளில் நிலைத்திருந்து வெற்றியுள்ள கிறிஸ்தவனாய் வாழ்.