ஏப்ரல் 17             

“மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்” (பிரசங்கி 1:2).

      சாலமோன் தன் வாழ்க்கையில் அனுபவிக்காத எதுவுமே இந்த உலகத்தில் இல்லை என்ற அளவுக்கு வாழ்ந்தவன். ஒரு மனிதனாக எல்லாவற்றையும் அனுபவித்த நிலையில் இந்த மிகப் பெரிய உண்மையை எடுத்துப் பேசுகிறதை நாம் பார்க்கிறோம். மெய்யாலுமே நாம் இந்த காரியத்தை நம்முடைய இருதயத்தில் உணர்ந்திருக்கிறோமா? அடுத்த வசனத்தில் ‘சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?’ என்று கேட்கிறான். இந்த உலகத்தில் மனிதன் தன் பிரயாசத்தினால் சாதிப்பது என்ன? இந்த உலகம் மாயை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். வரப்போகிற நித்தியமான ஒரு ராஜ்ஜியம் உண்டு என்பதை நாம் மறந்து விடுவோமானால் அது எவ்வளவு பயங்கரமானது. மனிதனின் இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு ஒரு வாழ்க்கை உண்டு என்பதை வேதம் தெளிவாக சொல்லுகிறது. அதில் இரண்டு இடம் உண்டு. ஒன்று பரலோகம். இன்னொன்று நரகம்.

      ஒரு மனிதன் நித்திய உலகத்தில் ஏதாவது ஒரு இடத்துக்குதான் செல்வான் என்பது உறுதி. ஆனால் அவன் எதை அடிப்படையாகக் கொண்டு இந்த உலகத்தில் வாழ்கிறான் என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். இந்த உலகத்தில் பரலோக சிந்தையோடு அதை நோக்கி பார்த்து வாழுகிற வாழ்க்கை நம்மில் உண்டா? அவ்விதமான ஒரு வாழ்க்கைக்காக நம்மை நாம் அர்பணித்திருக்கிறோமா? இயேசு கிறிஸ்துவை சார்ந்து இருக்கிறோமோ? நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் அவருடைய திட்டம் தீர்மானம் உண்டு என்பதை நம்மால் விசுவாசிக்க முடிகிறதா? இவைகள் நம் வாழ்க்கையின் அத்தியாவசியமான கேள்விகள். ஒருவேளை நம்முடைய வாழ்க்கையில் இது நாள் மட்டும் இரட்சிப்புக்கு உரிய  காரியங்கள் இல்லாமல் இருக்குமானால், இயேசுகிறிஸ்துவினுடைய மகத்துவமான இந்த மீட்பு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த நபராக இல்லை என்றால் இன்று இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுங்கள். உங்களுடைய நித்தியத்தைக் குறித்து நீங்கள் தீர்மானியுங்கள். இந்த உலக வாழ்க்கை நித்திய காலமாக இருப்பதில்லை.