ஏப்ரல் 15   

“எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்” (சங்கீதம் 57:2).

      இந்த இடத்தில் சங்கீதக்காரன் ஆண்டவர் பேரில் வைத்திருக்கிற விசுவாச அளவைப் பாருங்கள். எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவன் என்று ஆண்டவருக்கு பெயர் சூட்டுவதைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ தேவைகள் உண்டு. சரீரத்தின் தேவைகள் உண்டு. ஆத்துமாவின் தேவைகள் உண்டு. இவைகள் எல்லாவற்றையும் சந்தித்து, சகலத்தையும் அவர் நேர்த்தியாய் செய்து முடிக்கிறார் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர்  உங்கள் எல்லா காரியங்களையும் அவர் பொறுப்பேற்று செயல்படுத்துவார் என்பதை விசுவாசிக்க முடிகிறதா? உங்களுடைய இக்கட்டு வேளையில் உங்கள் காரியங்கள் அனைத்தையும் தேவன் நிறைவேற்றி தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவார் என்று விசுவாசிக்க முடிகிறதா?

உண்மைதான் நம்முடைய வாழ்க்கையில் அநேக வேளைகளில் நம்முடைய காரியங்களைக் குறித்து நாம் மிகுந்த மனவருத்தத்தோடும், வேதனையோடும்  கடந்து செல்கிறோம். ஆனால் இவைகள் எல்லாவற்றையும் நமக்காக ஆண்டவர் செய்து முடிப்பார். “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங்கீதம் 138:8) என்று தாவீது மிக அழுத்தமாக சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையின் எல்லாத் தேவைகளின் மத்தியிலும், ஆண்டவர் அவைகளை நிறைவேற்றுவதற்காக அவரில் விசுவாசம் வைத்து, நாம் காத்திருப்பதும் மிக அவசியம். இந்த இடத்தில் சங்கீதக்காரன் ‘உன்னதமான தேவனை நோக்கி’ என்று சொல்லுகிறார். ஆண்டவரைக் குறித்த ஒரு உயர்ந்த எண்ணத்தைக் கொண்டிருப்பது மிக அருமையான ஒரு காரியம். நாம் ஆண்டவரை குறித்து உயர்வாக எண்ணி அவரை மகிமைப்படுத்தும் பொழுது, நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் நமக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.