கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 4                       பாவத்தை ஒத்துக்கொள்ளுதல்                  சங்கீதம் 51:1–10

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்;

தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்தேன்” (சங் 51:3,4)

     இந்த சங்கீதம் நமக்கு அருமையான ஆவிக்குரிய காரியங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. தாவீது பாவத்தில் விழுந்த பின்பாக தேவ மனிதன் நாத்தான் அவனுடைய பாவத்தை சுட்டிக்காண்பித்தான். அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன்’ (2சாமு 12:13) என்று தன்னுடைய பாவத்தை ஒத்துக்கொண்டான். நம்மில் இயற்கையாக இருக்கிற தன்மை என்ன தெரியுமா? நம்முடைய தவறை ஒத்துக்கொள்ள முடியாமை. நம்முடைய பாவத்தை சுட்டிக்காட்டினால், உடனே நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் அல்லது நாம் அதை மற்றவர்கள் மேல் சுமத்த விரும்புகிறோம். இது இன்று நேற்று வந்த காரியமல்ல, நம்முடைய ஆதி பிதாக்களிலிருந்து தொன்று தொட்டு வந்த காரியம்.

     ஆதாம் பாவம் செய்தபொழுது, புசிக்கக்கூடாது என்று விலக்கின கனியைப் புசித்த பின்பு தேவன் அவனைப்பார்த்து என்ன கேட்டார்? புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார் (ஆதி 3:11). அப்பொழுது ஆதாம் ஆம் என்று ஒத்துக்கொண்டு ஆண்டவரே என்னை மன்னியும் என்று மன்னிப்புக்கேட்டானா? இல்லை. அவன் தவறை ஒத்துக்கொள்ள விரும்பவில்லை. அந்தத் தவறை தேவன் மேலும், ஏவாள் மேலும் சுமத்தினான். என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரியானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்என்றான் (ஆதி 3:12). உடனே தேவன் ஏவாளைக்கேட்டபொழுது, ஏவாள் தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ள மறுத்து சர்ப்பத்தைக் குற்றம் சாட்டினாள். சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன்என்றாள்(ஆதி 3:13).

     அன்பானவர்களே! நம்முடைய தவறு அது சிறியதாயிருந்தாலும் சரி பெரியதாயிருந்தாலும் சரி அதை ஒத்துக்கொள்ளும் போது தேவன் நமக்கு அதிலிருந்து விடுதலையையும் மன்னிப்பையும் கொடுக்கிறார். தவறுகளை, பாவங்களை ஒத்துக்கொள்ளுவது ஒரு கிறிஸ்தவனில் காணப்படவேண்டிய முக்கிய அடையாள குணம்.