ஏப்ரல் 18
“நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்” (நெகேமியா 1:7).
எருசலேமின் செய்தியையும், யூத ஜனங்கள் படுகிற பாடுகளையும், அலங்கம் இடிபட்ட நிலையும் குறித்து நெகேமியா கேள்விப்பட்ட பொழுது, துக்கத்துடன் ஜெபிப்பதை பார்க்கிறோம். யூதர்கள் தேவனுடைய கற்பனைகளை விட்டு விலகிப்போய் பாவம் செய்ததால் வந்த நிலைமை குறித்து, உண்மையான மனவருத்தத்தோடு நெகேமியா ஜெபிக்கிறான். இந்த நாட்களில் மெய்யான மனவருத்தத்தோடு தேவன் பக்கமாய் திரும்புகிற ஜனங்கள் இல்லாது போன காலமாய் காணப்படுகிறது. ஆனால் ரட்சிப்பின் வழி இது மாத்திரமே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நெகேமியா தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய கற்பனைகளை விட்டு விலகிப் போவதை குறைத்து, மன வருத்தத்தை தெரிவிக்கிறதை பார்க்கிறோம். நம் வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமில்லாத வாழுகின்ற வாழ்க்கை குறித்தான உண்மையான மன வருத்தத்தை நாம் கொண்டிருக்கிறோமா? முடியாத காரியங்களை குறித்து நாம் வேதனையுடன் தேவன் பக்கமாக திரும்பிபோது, அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். இந்த உலகத்தில் எவ்வளவுதான் ஆசீர்வாதங்களை பெற்று, வாழ்ந்து மரித்தாலும் ஒரு முடிவில்லாத நித்தியத்தை நோக்கிப் போகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம் ஆத்துமாவை குறித்து அக்கறையோடு வாழ்வதின் அவசியத்தை உணர முடிகிறதா?
“நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்” (தானி 9:5-6) என்று தானியேலும் ஜெபிப்பதை வேதத்தில் பார்க்கிறோம். இந்த காலங்களில் நாம் தேவனுக்கு முன்பாக மனந்திரும்புவதும், தேவனுக்கு முன்பாக நம் இருதயத்தை செம்மைப்படுத்துவது போல மேன்மையான காரியம் ஒன்றுமில்லை. இந்த உலகத்தில் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் ஆத்மாவை குறித்து அக்கறை இல்லாமல் இருப்பது மிக வேதனையான காரியம். இந்த காலங்களில் கர்த்தர் நம்மிடத்தில் எதை எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து தேவன் பக்கமாய் திரும்பக்கடவோம். தேவன் நமக்கு இரங்கி நம்முடைய பாவங்களை அகற்றிப்போடுவார்.