கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 11                 சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுதல்              மத் 16:1-26

“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்

தான் வெறுத்து, தன் சிலுவையை

எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்”(மத் 16:24).

    கிறிஸ்தவ வாழ்க்கை என்பது என்ன என்பதை அநேகர் சரியாக புரிந்து கொள்ளாததே, அவர்களுடைய வாழ்க்கையின் பல தோல்விகளுக்குக் காரணமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து தெளிவாக போதித்த ஒரு உண்மை கிறிஸ்தவ வாழ்க்கையில் பாடுகள் உண்டு என்பதே. சிலுவை இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிடையாது. ஆகவே அவர் மறுபடியும் மறுபடியுமாக சொன்ன ஒரு உண்மை அவரை பின்பற்ற விரும்பினால், நம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு நாம் அவரை பின்பற்ற வேண்டும் என்பதே.

    அப்போஸ்தலர் நடபடிகளில் பவுல் சீஷர்களை திடப்படுத்திச் சொன்ன காரியம் என்னவென்றால், “விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்”(அப் 14:22) என்று பார்க்கிறோம். ஒரு மெய் கிறிஸ்தவனுக்கு உலக சிந்தனை என்பது இருக்கக்கூடாது. நித்திய ராஜ்ஜியத்தைக் குறித்த சிந்தனையானது நம்முடைய வாழ்க்கையில் தொடர்ச்சியாய் காணப்படவேண்டிய அதிமுக்கியமானது.

     இன்னுமாக பவுல் தெசலோனிக்கேயத் திருச்சபைக்கு எழுதும்பொழுது, “இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே” (1 தெச 3:3) என்று எழுதுகிறார். ஆகவே நாம் கிருபையினால் நம்முடைய உபத்திரவங்கள், பாடுகளைச் சகித்து செல்லவில்லை என்றால், நாம் பரலோக இராஜ்ஜியத்தின் வழியில் நடக்க முடியாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பவுல் கடைசியாக தீமோத்தேயுவுக்கு எழுதும் பொழுது கூட, “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோ 3:12) என்றும் எழுதுகிறார். உன் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்று. இதுவே ஜீவ வழி.