ஜனவரி 11                     தேவனுடைய வார்த்தையின்படி                  லூக்கா 5:1-11

“அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும்

ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்

படியே வலையைப் போடுகிறேன் என்றான்” (லூக்கா 5:5).

      நாமும் கூட சீமோன் பேதுருவைப் போல அதிகமான பிரயாசங்கள், உழைப்புகள், பாடுகள் மத்தியில் தேடியும் ஒன்றும் அடையாமல் இருக்கலாம். நம் வாழ்க்கையின் இவ்விதமான சூழ்நிலையில் தேவன் ஒரு காரியத்தை நமக்குப் போதிக்க விரும்புகிறார். அது, நம் சொந்த முயற்சியையும், சுய திட்டத்தையும் கைவிட்டுவிட்டு தேவனுடைய வார்த்தையை நாம் சார்ந்துகொள்ள வேண்டும். இந்த வசனத்தில் ‘உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்’ என்று பேதுரு சொல்லுகிறார். தேவனுடைய வார்த்தையை சார்ந்து நாம் திட்டங்களை வகுக்கும் பொழுதும், முடிவுகளை எடுக்கும் பொழுதும், முயற்சிகள் செய்யும் பொழுதும் என்ன நடக்கும்? “அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்” (லூக்கா 5:6).

      தேவன் நமக்கென்று உன்னதமான ஆசீர்வாதங்களை வைத்திருக்கும் பொழுது, நாம் அற்பமான காரியங்களுக்காக பிரயாசப்பட்டு, அது கிடைக்கவில்லையெனில் வருத்தப்படுகிறோம். ஏனெனில் நாம் அவருடைய வார்த்தையின்படி செய்ய விருப்பமற்றவர்களாக, மனதற்றவர்களாகக் காணப்படுகிறோம். ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் அவருடைய வார்த்தையின்படி வாழவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். தேவனுடைய வார்த்தையின் படி நாம் நடவாமல், நம் வாழ்க்கையில் நிறைவைக் காணமுடியாது. நாம் தேவனுடைய வார்த்தையின் படி நடக்கும்பொழுது, நம் பிரயாசங்களுக்கும், முயற்சிக்கும் மேலாக ஆசீர்வதித்து அதை வர்த்திக்கிறவராக இருக்கிறார். ஆகவே நாம் கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன், அவருடைய வார்த்தையின்படி நடக்க கற்றுக்கொள்வோம். நிச்சயம் உன்னதமான காரியங்களைக் கண்டடைவோம்.